ஹிஜாப் விவகாரம்: பின்னணியில் அல்கொய்தா?

ஹிஜாப் விவகாரம்: பின்னணியில் அல்கொய்தா?

Share it if you like it

ஹிஜாப் போராட்டத்தின் போது அல்லாகூ அக்பர் என்று கூச்சலிட்ட மாணவி முஸ்கான் கானை பாராட்டி, அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி வீடியோ வெளியிட்டிருப்பதன் மூலம், ஹிஜாப்புக்கு பின்னணியில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி பி.யூ. கல்லூரியில் படித்த இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் சிலர் திடீரென கடந்த ஜனவரி மாதம் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வரத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிந்து மாணவ, மாணவிகள் காவி ஷால், துண்டு அணிந்து வரத் தொடங்கினர். இது பெரும் சர்ச்சையானது. இதனால், மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை யாரும் அணியக் கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அடிப்படைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, 144 தடை உத்தரவும் போடப்பட்டது. பின்னர், அடிப்படைவாதிகள் கோர்ட்டை நாடினார்கள். கோர்ட்டும் ஹிஜாப் என்பது இஸ்லாமியர்களின் அத்தியாவசிய கடமை அல்ல என்று தீர்ப்பளித்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அடிப்படைவாதிகள் நீதிபதிகளுக்கே கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த விவகாரம் இன்னும் நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இத்தனை ஆண்டு காலமாக ஹிஜாப் அணியாத மாணவிகள், திடீரென அணிந்து வரக் காரணம் என்ன? இதன் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டது. இந்த நிலையில்தான், எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்திருக்கிறார்கள் அல்கொய்தா பயங்கரவாதிகள். அதாவது, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி, ஹிஜாப் போராட்டத்தின்போது அல்லாகூ அக்பர் என்று குரல் கொடுத்த முஸ்கான் கான் என்கிற மாணவிக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். மேலும், ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டும் என்று வன்முறையை தூண்டி விட்டிருக்கிறார். இதன் மூலம் ஹிஜாப்புக்குப் பின்னணியில் அல்கொய்தா அமைப்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுப்பெற்றிருக்கிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா, “ஹிஜாப் விவகாரத்துக்குப் பின்னணியில் ஏதோ சதி இருக்கிறது. யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். கோர்ட்டும் ஹிஜாப்புக்கு பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத சக்திகள் இருப்பதாக கருத்துத் தெரிவித்திருந்தது. தற்போது, ஹிஜாப்புக்கு ஆதரவாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் குரல் கொடுத்திருப்பதின் மூலம், பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த விஷயங்கள் எப்படி நடக்கிறது? இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பது பற்றி காவல்துறையினர் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் எல்லாம் வெட்ட வெளிச்சமாகும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it