கர்நாடக மாநிலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில், கத்தியை காட்டி பொதுமக்களை குத்திவிடுவதாக மிரட்டிய அப்துல் ஜாபரை, போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து, நையப்புடைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் கலபுர்கியில் காய்கறி மார்க்கெட் ஒன்று இருக்கிறது. இங்கு, நேற்று இரவு கருப்பு நிற பனியன் மற்றும் பேண்ட் அணிந்த நபர் ஒருவர், கையில் கத்தியை வைத்துக் கொண்டு, அருகில் வந்தால் குத்தி விடுவதாக பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார். இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது தெரியவில்லை. போலீஸார் எவ்வளவோ எச்சரித்தும் அந்த வாலிபர் கேட்கவில்லை.
ஆகவே, அந்த வாலிபரை பிடிக்க போலீஸார் நெருங்கிச் சென்றால், போலீஸாரையே கத்தியால் குத்த முயற்சி செய்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த வாலிபரை சுட்டுப் பிடிப்பது என்கிற முடிவுக்கு போலீஸார் வந்தனர். அதன்படி, அந்த வாவியரின் காலை குறிபார்த்து ஒரு போலீஸ்காரர் சுடவே, காயமடைந்த அந்த வாலிபர் கீழே விழுந்தார். உடனே, மற்ற போலீஸார் அந்த வாலிபரை சூழ்ந்து கொண்டு லத்தியால் சரமாரியாகத் தாக்கினர். இது குறித்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிடிபட்ட வாலிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜாபர் என்பது தெரியவந்தது. மேலும், அந்த வாலிபர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததும், அங்கிருந்து தப்பி வந்து பொதுமக்களை கத்தியைக் காட்டி மிரட்டியதும் தெரியவந்தது.