கருணாநிதி பேனாவின் பெருமை குறித்து தி.மு.க.வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா பேசியிருந்த நிலையில், அந்த பேனாவின் சிறுமை குறித்து கூறி பதிலடி கொடுத்திருக்கிறார் தென்னிந்த பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி.
10 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின், விதி எண் 110-ன் கீழ் அறிவித்திருந்தார். இதற்கு அப்போதே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்த சூழலில், பேனா நினைவுச்சின்னம் அமைப்பது குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 31-ம் தேதி நடந்தது. அப்போது, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க., அ.தி.மு.க., பூவுலகின் நண்பர்கள் என பலரும் கடலுக்குள் பேனா சிலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதன் பிறகு, பேனா நினைவுச் சின்னத்துக்கான எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது. பேனா நினைவுச்சின்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வரும் நிலையில், தி.மு.க.வினர் ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல, கருணாநிதியின் பேனா செய்த பெருமைகள் என்று தி.மு.க.வினர் பலரும் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தி.மு.க.வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, கருணாநிதியின் பேனா செய்த சாதனைகள் என்று பல விவரங்களை குறிப்பிட்டிருந்தார். இதற்குத்தான் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி, கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
கருணாநிதியின் பேனா செய்த துரோகங்கள் என்று திருமாறன் ஜி பட்டியலிட்டிருக்கும் விஷயங்கள் இதோ… விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார், உடல் நலம் குன்றியிருந்த நிலையில் தமிழத்திற்கு சிகிச்சைக்காக வந்தபோது, விமானத்திலிருந்து அவரை கீழே இறங்கக் கூட விடாமல் திருப்பி அனுப்பியது, கருணாநிதியின் அந்தப் பேனாதான். இலங்கையில் 1.50 லட்சம் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது கருணாநிதியின் அந்தப் பேனாதான். கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் என்று சொல்லி, கோடிகளை ஆட்டைய போட்டது கருணாநிதியின் அந்தப் பேனாதான். கருணாநிதியின் பேனா பற்றிய கதையை கண்ணதாசன் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு தமிழக குடிமகன்கள் மீதும் 2.75 லட்சம் கடன் இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். அப்படி இருக்க, மக்கள் வரிப்பணத்தில் ஏன் கருணாநிதி பேனாவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இது தொடர்பான காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.