கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
“அஞ்சுவனோ வெள்ளையரின் ஆட்சியொழிப்பேன் என்று
வஞ்சினம் கூறிநின்ற மாவீரன் – விஞ்சுபுகழ்ச்
செந்தமிழ்ச் செல்வன் சிதம்பரப் பேரண்ணலை
நாம் வந்தனை செய்வோம்” – என வஉசி பற்றியும்,
“இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே” – என பாரதத்தாய் பற்றியும்
“வீரர் துணிந்தேறி நட்டக்கொடி – இது
வெற்றி விருதா எடுத்த கொடி;
யாரும் இறைஞ்சி வணங்கும் கொடி
என்று சுதந்திரம் ஈட்டும் கொடி” – என கொடியினைப் பற்றியும் பாடியுள்ளார், ஒரு கவிஞர்.
மா.பொ.சி., டி.கே.சி. போன்றார் அவரது இல்லத்திலேயே சென்று சந்தித்தனர். தமிழை தேடி சென்று பார்க்க வேண்டும் என்னும் எண்ணத்தில், மேற்குவங்க ஆளுநராக இருந்த ராஜாஜி அவர்கள், அவர் இல்லம் தேடி சென்றார். கலைவாணர் என்.எஸ்.கே, எம்.கே. டி. பாகவதர் என்ற பல அறிஞர்களுக்கும் இவர் வீடு தேடி சென்று பார்த்தனர்.
27 ஜூலை, 1876 – சிவதாணு மற்றும் ஆதிலட்சுமி அம்மையாருக்கு மூன்றாவது குழந்தையாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயிலில், சுசிந்திரத்தில் இருந்து 4 மைல் தொலைவில் உள்ள, “தேரூர்” என்னும் சிற்றூரில், பிறந்தார். இவரின் பத்தாவது வயதில், தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பிலும் மற்றும் உற்றார் உறவினர்கள் துணையுடன் வளர்ந்தார்.
திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்க தம்பிரானிடம், தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கோட்டாறு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். முதுகலைப் பட்டமும் பெற்றார். திருவனந்தபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
உலகெங்கும் தமிழ் பாட்டைப் படிக்கும் பாடகர்களுக்கு, சொல் அமுதாய் இனிக்கும் எளிமையும், இனிமையும் நிறைந்த, “மலரும் மாலையும்” என்ற கவிதைத் தொகுப்பை, கவியின் மணிமொழிகளாக கவிமணி வழங்கினார்.
தேசிக விநாயகம் பிள்ளைக்கு, “கவிமணி” என்ற பட்டத்தை, சென்னை மாநில தொழிற்சங்கத்தின் சார்பில், உமா மகேஸ்வரன் பிள்ளை அவர்கள் வழங்கினார்.
இந்திய விடுதலைக்காக, தனது பாடல்கள் மூலம் தமிழ் மக்களை விழிப்படையச் செய்தார். 1932 ல், இரண்டாவது வட்டமேசை மாநாடு பற்றிய அவருடைய பாடல்கள், அன்றைய அரசியல் சிக்கல்கள் பற்றி தெளிவாக எடுத்து உரைக்கின்றது. மேலும், பட்டியலின மக்களின் வாழ்க்கை மேம்பாடு, இந்து – முஸ்லீம் ஒற்றுமை போன்றவற்றைக் குறித்தும் கவிதை எழுதி உள்ளார்.
மதன் மோகன் மாளவியா, காந்தியடிகள், கவிக்குயில் சரோஜினி நாயுடு போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் தனி இயல்புகள் பற்றி தெளிவாக விளக்கி உள்ளார்.
“மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா…”
எனப் பாடி பெண்கள் விடுதலை, பெண்களின் முன்னேற்றம் போன்றவற்றில், தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
விடுதலைப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு போன்ற பல சமுதாய சீர்கேடுகளை, கவிதையாக வடித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதில் முக்கியப் பங்கு வகித்தார்.