உணவு உண்ணாமல் இருந்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று கூறிய பாதிரியாரின் பேச்சை நம்பிய 47 அப்பாவிகள் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கென்யாவின் கடலோர நகரமான மலிந்திக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதி ஷகாஹோலா. இந்த, காட்டுப் பகுதியில் குவியல் குவியலாக மனித உடல்கள் இருப்பதை கண்டு அந்நாட்டு காவல்துறையினர் கடும் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். இதையடுத்து, அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்ட போது இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, பட்டினி கிடந்து விரதமிருந்தால் சொர்க்கத்துக்கு செல்ல முடியும் என பாதிரியார் பால் மெக்கன்சி கூறியிருக்கிறார். இதனை, நம்பி அப்பகுதியை சேர்ந்த அப்பாவி மக்கள் விரதமிருந்து இருக்கிறார்கள். இதில் நான்கு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இதையடுத்து, பாதிரியார் கைது செய்யப்பட்டார். அவரிடம், நடத்திய விசாரணையில் பலர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ஷகாஹோலா காட்டுப் பகுதியில் உள்ள கல்லறையில் காவல்துறையினர் நடத்திய தேடுதலின் போது பலரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 47 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அதே நாட்டை சேர்ந்தவர் ‘யேசு வா டோங்கரேன். இவர், இயேசுவின் மறுபிறவி நான் தான் என்று கூறிக்கொண்டு, அந்நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கி வந்துள்ளார். இந்தநிலையில், பங்கோமா என்ற பகுதியை சேர்ந்தவர்கள் சிலுவையில் அறைந்து 3-ஆம் நாளில் உயிர்தெழுந்து வந்தால் மட்டுமே நாங்கள் நம்புவோம் என்று கூறியிருக்கின்றனர். இதானல், அதிர்ச்சியடைந்த டோங்கரேன் தான் ஒரு டுபாக்கூர் என்பதை மக்கள் கண்டுபிடித்து விட்டால், தன்னை சிலுவையில் அறைந்து விடுவார்களோ என்ற அச்சத்தில், காவல்துறையில் தனக்கு பாதுகாப்பு வழங்கும் படி மனு அளித்துள்ளார்.