கேரளாவில் குவியல் குவியலாக பயங்கர வெடி பொருட்களை வீட்டில் பதுக்கி வைந்திருந்த முகமது முஸ்தபா என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தது அதுார் கிராமம். இக்கிராமத்தில் கள்ளச் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கலால் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்கிராமத்திற்குச் சென்ற கலால் துறையினர், வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை முகமது முஸ்தபா என்பவரது வீட்டுக்கு அதிகாரிகள் சென்றபோது, வாசலில் சொகுசு கார் ஒன்று நின்றிருந்தது. இக்காரின் பின்புறம் ஏராளமான அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதில், கள்ளச் சாராய பாக்கெட்டுகள் இருக்கலாம் என்று சந்தேகமடைந்த கலால் துறையினர், முகமது முஸ்தபா வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டனர். அப்போது அங்கு, குவியல் குவியலாக பயங்கர வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கலால் துறையினர், உடனடியாக அதூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் சோதனை செய்ததில், முகமது முஸ்தபாவின் வீடு மற்றும் காரில் 13 பெட்டிகளில் 2,800 ஜெலட்டின் குச்சிகள், 7,000 டெட்டனேட்டர்கள், 1 டைனமைட் மற்றும் 5 பண்டல் ஒயர்கள் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, முகமது முஸ்தபாவின் வீட்டை போலீஸார் சல்லடை போட்டு சோதனையிட்டனர். இதனால் பதற்றமடைந்த முகமது முஸ்தபா, திடீரென தனது கை மணிக்கட்டை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட போலீஸார், உடனடியாக காசர்கோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, முகமது முஸ்தபாவுக்கு எங்கிருந்து வெடி பொருட்கள் கிடைத்தன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சட்டவிரோதமாக வெடி பொருள் தயாரித்தல், பதுக்கி வைத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முகமது முஸ்தபாவை போலீஸார் கைது செய்தனர்.