வீடியோ வெளியிட்டு கேரள அரசுக்கு கவர்னர் செக்!

வீடியோ வெளியிட்டு கேரள அரசுக்கு கவர்னர் செக்!

Share it if you like it

கேரளாவில் தன்னை தாக்க முயன்றவர்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டு, மாநில கம்யூனிஸ்ட் அரசுக்கு செக் வைத்திருக்கிறார் கவர்னர் ஆரிஃப் முகமது கான்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், கவர்னர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த மாதம் டெல்லி சென்ற கவர்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கண்ணூர் பல்கலைக்கழகத்தில் 2019-ம் ஆண்டு நடந்த வரலாற்று மாநாட்டில் என்னை தாக்குவதற்கு துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் தலைமையில் சிலர் திட்டமிட்டனர். மேலும், குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான கருத்துக்களை நான் பேசியபோது, வரலாற்று ஆசிரியர் இர்பான் ஹபீப் எனது பேச்சு குறித்து கேள்வி எழுப்ப முயன்றதோடு, என்னை தாக்கவும் திட்டமிட்டார். இதுபற்றி போலீஸின் கவனத்துக்கு கொண்டுசென்ற பிறகும், விசாரணைக்கு துணைவேந்தர் ஒத்துழைக்கவில்லை” என்று குற்றம்சாட்டி இருந்தார்.

இதனிடையே, ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக, முதல்வர் பினராயி விஜயனின் உதவியாளர் மனைவி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை கவர்னர் ஆரிஃப் முகமது கான் நிராகரித்து விட்டார். இது கவர்னர், முதல்வர் இடையே மோதலை அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், கவர்னருக்குரிய அதிகாரத்தை குறைத்து, சட்டத் திருத்தம் கொண்டு வந்தது பினராயி அரசு. ஆனால், இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இரு தரப்பினரும் கீரியும் பாம்புமாக இருந்து வருகின்றனர். இந்த சூழலில், கவர்னர் ஆரீப் முகமது கான், கண்ணுார் பல்கலை.யில் தன்னை தாக்க முயன்ற விவகாரத்தில், இதுவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கூடாது என்று போலீஸாருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும், சில ரகசிய கடிதங்களையும் வெளியிடுவேன் என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்திலுள்ள கவர்னர் மாளிகையில் செய்தியாளர் கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தார் கவர்னர் ஆரிஃப் முகமது கான். அப்போது, சில வீடியோக்களை ஒளிபரப்பினார். மேலும், தனக்கும், அரசுத் தரப்புக்கும் இடையே நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோக்களையும் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர், “கண்ணுார் பல்கலை.யில் என்னை தாக்குவதற்கு சிலர் முயற்சித்தனர். அவர்களை போலீஸார் தடுக்க முயன்றபோது, முதல்வரின் தனிச் செயலராக பணியாற்றும் கே.கே.ராகேஷ், போலீஸாரை தடுத்தார். அந்த வீடியோவைத்தான் இங்கு ஒளிபரப்பினேன். கவர்னர் மாளிகையின் பணி நியமனங்களில் மாநில அரசு தலையிட்டது. இது தொடர்பான உரையாடல்கள்தான் தற்போது ஒலிபரப்பப்பட்டன. அதிருப்தியாளர்களின் குரல்களை ஒடுக்க, மாநில அரசு முயற்சிக்கிறது. பல்கலை.களில் கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. இதை மாநில அரசால் குறைக்கவோ, தடுக்கவோ முடியாது” என்றார் உறுதியாக.

கவர்னரின் இந்த வீடியோ மற்றும் ஆடியோவால் பினராயி தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு திகைத்துப் போய் நிற்கிறது.


Share it if you like it