திருவனந்தபுரத்தில் உள்ள மதக் கல்வி மையத்தில் 17 வயது சிறுமியின் மர்ம மரணம் கேரளாவில் புயலைக் கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக, அச்சிறுமிக்கு நீதி கேட்டு சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகி வரும் நிலையில், பெற்றோரும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.
திருவனந்தபுரம் பலராமபுரத்தில் அல் அமான் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ரஹ்மது பீவி – நசுருதீன் தம்பதியினரின் மகளான அஸ்மியா மோல் என்கிற 17 வயது மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்தார். நசுருதீன் கடந்த ஒகி புயலின்போது, காணாமல் போய் விட்டார். இதனால், ரஹ்மத் பீவி இட்லி மாவு தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் அஸ்மியாவின் சித்தப்பாதான், அவரது படிப்புச் செலவுக்கு பண உதவி செய்து வந்தார். பொதுவாகவே, இப்பள்ளியின் விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள் வாரம் ஒருமுறை பெற்றோரை சந்திக்க அனுமதி உண்டு. ஆனால், அஸ்மியாவை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெற்றோரை சந்திக்க அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி தனது தாயாருக்கு போன் செய்த அஸ்மியா, பள்ளி மற்றும் விடுதியில் தன்னை மிகவும் டார்ச்சர் செய்வதாக கூறி அழுதிருக்கிறார். இதையடுத்து, மகளை பார்ப்பதற்காக ரஹ்மது பீவியும், அவரது தாயாரும் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களை அஸ்மியாவை சந்திக்க அனுமதிக்கவில்லை. பள்ளி நிர்வாகியையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. எனினும், ரஹ்மது பீவியும், அவரது தாயாரும் விடாப்பிடியாக உள்ளே சென்றனர். ஆனால், அஸ்மியா விடுதி அறையில் இல்லை. கேட்டதற்கு குளியலறையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அங்கு சென்று பார்த்தபோது, அஸ்மியா இல்லை. இதையடுத்து, பல்வேறு இடங்களில் சென்று பார்த்தும் அஸ்மியாவை காணவில்லை.
இதைத் தொடர்ந்து, விடுதியின் நூலகத்திற்கு சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கு, தூக்கில் தொங்கிய நிலையில், அஸ்மியா காணப்பட்டார்.. இதைக் கண்ட அதிர்ச்சியடைந்த பெற்றோர், அஸ்மியாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள்ளாகவே அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அஸ்மியாவின் பெற்றோர், பள்ளி நிர்வாகம்தான் தனது மகளை கொலை செய்து விட்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ரஹ்மது பீவி பலராமபுரம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் ‘#JusticeForAsmiya’ என்று ஹேஷ்டேக் உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். இதனிடையை, அஸ்மியா மிகவும் புத்திசாலி பெண் என்பதோடு, மிகவும் கலகலப்பான பெண். அவள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்வதை நாங்கள் நம்பத் தயாராக இல்லை. அவளது மரணத்தில் யாரோ ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். அதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நாங்கள் எங்கள் குழந்தையை இழந்து விட்டோம். ஆனால், இது தொடர்கதையாகி விடக் கூடாது என்பதற்காக போராடுவோம் என்று பள்ளி மாணவிகளும், அஸ்மியாவின் சகோதரரும் கூறியிருக்கிறார்கள்.