கிருபானந்த வாரியார் சுவாமிகள்

கிருபானந்த வாரியார் சுவாமிகள்

Share it if you like it

சைவ ஆன்மீகத் தலைவர் தெய்வ திருமுருகன் கிருபானந்த வாரியார் சுவாமிகள், திரு மல்லயதாச பாகவதர் மற்றும் மது ஸ்ரீ கனகவள்ளி அம்மையார் ஆகியோருக்கு, 25 ஆகஸ்ட் 1906 அன்று, வேலூர் – காங்கேயநல்லூரில் பிறந்தார். அவரது தந்தை, திருப்புகழ் சபாக்களை நிறுவி, புராணங்களில் சிறந்த அறிஞராக இருந்தார்.

கிருபானந்தருக்கு பத்து உடன்பிறப்புகள் இருந்தனர். அவரது தந்தை, அவருடைய குருவாக இருந்தார், தந்தையிடமிருந்து இலக்கணம், இலக்கியம், வீணை வாத்தியம் மற்றும் இசையைக் கற்றுக் கொண்டார். மதுரை திருப்புகழ் சுவாமி ஐயரிடம், ‘திருப்புகழ்’ கற்றார். வாரியார் அவர்களின் தீக்ஷா குரு, “சித்தாந்த சரபம் ஈசன சிவாச்சாரியார் சுவாமிகள்” ஆவர். பாம்பன் சுவாமிகளால் ஆசீர்வதிக்கப் பட்டு, அவரிடமிருந்து சைவ சித்தாந்தத்தைக் கற்றுக் கொண்டார்.

எட்டாவது வயதில் கவிதையும், 12ம் வயதில் ‘சிவலிங்க பந்தங்கள்’, ‘மயில் அஷ்ட நாக பந்தம்’, ‘வேல்’ போன்றவற்றை எழுதினார். ‘மகாபாரதம்’, ‘கம்ப ராமாயணம்’, ‘திருப்புகழ்’, ‘கந்த புராணம்’ போன்றவற்றில், சுமார் 200 புத்தகங்களை எழுதினார், மேலும் ‘திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாத இதழை வெளியிட்டார். குழந்தைகளுக்கான புத்தகங்களையும் எழுதி, ஆன்மீக சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும், மிக எளிமையான முறையில், குழந்தைகளின் புரிதலுக்கு ஏற்ப கொண்டு செல்வது, வாரியாரின் திறமையாகும். அவரது அருணகிரிநாதரின் படைப்புகள் குறித்த வர்ணனைகளும் குறிப்பிடத்தக்கவை. ‘மிருதங்க சக்கரவர்த்தி’, ‘நவக்கிரக நாயகி’, ‘திருவருள்’ போன்ற சில படங்களில் நடித்தவர் ‘சிவகவி’ படத்திற்கு திரைக்கதையையும் எழுதி உள்ளார். தமிழ் மொழியின் மீது, அதீத பற்று கொண்டிருந்ததால், அவரது சொற்பொழிவுகள் தமிழில் இருந்தன. அவருடைய சொற்பொழிவுகள், திருமூலரின் ‘திருமந்திரம்’ அல்லது பட்டினத்தாரின் பாடல்கள் அல்லது அருணகிரிநாதரின் ‘திருப்புகழ்’ என சமயம் சார்ந்ததாகவே மட்டும் இல்லாமல், சிறந்த தேசிய சிந்தனைகளையும் அவரது சொற்பொழிவில் காணலாம்.

சிறு வயதிலேயே அவரது இரக்க குணம் தென் பட்டதற்கான உதாரணமாக, பாலாற்றில் நீராட போகும் வழியில் தினந்தோறும் எறும்புப் புத்தில் எறும்புகள் சாப்பிடுவதற்காக, அரிசியை போடுவது ஒரு வழக்கமாக வைத்திருந்தார், ஸ்வாமிகள். பின்னர், ஏழைகள், முதியோர்கள், ஆதரவற்றோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் அனாதைகளுக்காகப் பணியாற்றினார்.

 திருப்பராய்த்துறையில் அவரது ‘ராமகிருஷ்ண குடில்’, குழந்தைகளுக்கான அனாதை இல்லமாக இருந்தது. ஏழை மாணவர்களுக்கும், மருத்துவ உதவியை நாடுவோருக்கும் உதவுவதற்காக, ‘வாரியர் பொது சேவை நிதி அறக்கட்டளை’யை உருவாக்கினார்.

வாரியார் பெண்களை மதிப்பிற்குரிய நிலையில் வைத்திருந்தார். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கண்ணீர் வடித்தால், குடும்பம் செழிக்காது என்பதை உணர்ந்தார். மனிதன் தன் பெயருடன் தாயாரின் பெயரையும் இணைத்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை எடுத்து வைத்தார்.  பெண்கள் கல்வியை ஆதரித்தார் மற்றும் கணவர்கள் தங்கள் மனைவிகளை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று விரும்பினார். சமூகத்தில் நிலவும் சமூகத் தீமைகளைக் கண்டித்து, தீண்டாமை நடைமுறைக்கு எதிராக இருந்தார். எப்போதும் இந்து ஒற்றுமையைக் கோரினார்.

முருகனின் பக்தர், வாரியார். எங்கு சென்றாலும், ஒரு பூஜை பெட்டியை எடுத்துச் சென்றார். ஒரு நாளும் பூஜையை தவற விட்டதில்லை என்று கூறப்படுகிறது. உபன்யாசம், கதாகாலக்ஷேபம் மூலம் பக்தர்களுக்கு உபதேசம் செய்தார்.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு, ஒரு பக்கம் சுதந்திரம் கோரி போராட்டங்கள் நடை பெற்று கொண்டிருந்தன. மறு பக்கம் மக்களை திசை திருப்பி, வேறு சிந்தனையில் கொண்டு செல்ல முயற்சிகளும் நடந்து கொண்டிருந்தன. இதில் முக்கியமான முயற்சி தான், இந்து மதத்தினர்களின் ஒற்றுமையை சீர் குலைத்து, வேற்றுமையை வளர்த்து, அவர்களுக்குள் மனக்கசப்பை உருவாக்கி, இந்துக்களிடையே சண்டையை உருவாக்கி, அவர்களை பிரித்து, சுதந்திர போராட்டத்தை வலுவிழக்க செய்ய சதி திட்டத்தில் ஈடு பட்டனர், ஆங்கிலேயர்கள். இதற்கு அவர்கள் இந்துக்கள் சிலரையே, தனது பிரதிநிதியாக மக்களிடம் அனுப்பினர்.

மத மாற்ற அரசியல் ஒரு பக்கம், ஆங்கிலேயர்களால் வியூகமாக நடத்தப்பட்டிருக்க, சனாதன தர்மத்தின் அடிப்படைக் கொள்கைகளை இழிவுபடுத்தி, நாத்திக திராவிட சித்தாந்தத்தின் வளர்ச்சி மறு பக்கம் இருக்க, சனாதனம் அறிவியலற்றது என்று தமிழ் மக்களை குழப்பும் வகையிலான கருத்துகளின் ஆரம்ப காலம், அது. “பகுத்தறிவு” என்ற பெயரில் இயங்கும் இயக்கம், நாத்திகக் கொள்கைகளின் புதிய திராவிடக் கருத்தியலைக் கொண்டு, தமிழ் அடையாளத்தை அகற்றி,  “தமிழர்கள் இந்துக்கள் அல்ல”, ஆனால், “நாத்திக திராவிடர்கள்” என்ற மறுவரையறை செய்யும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த நேரம், அது.

தமிழ்நாட்டின் வளமான கலாச்சார பொக்கிஷங்களைப் பாதுகாப்பதில், கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தனது ஆன்மீக வலிமை மற்றும் பொருத்தமான அறிவார்ந்த அணுகுமுறை மூலம், பிரிவினைவாதிகளின் தாக்குதல் மூலம், பல முயற்சிகளுக்கு தக்க விளக்கத்தை கொடுத்து, தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை எடுத்து சொல்லி, அவதூறான குற்றசாட்டுகளை பொய் என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்தார், கிருபானந்த வாரியார்.

இந்து மதத்தின் மீதான கடுமையான திராவிடத் தாக்குதல்களுக்கு, வாரியார் அளித்த பதில்கள் மென்மையாகவும், பக்குவமாகவும் இருந்தன. உதாரணமாக, சி.என்.அன்னாதுரையின் மரணத்தை அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் கூட தடுக்க முடியவில்லை என்று கூறினார், ஸ்வாமிகள். இதன் மூலம், அறிவியலின் கட்டுப்பாட்டில் இல்லாத மரணத்தை, தவிர்க்க முடியாத தன்மையை அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு தெய்வ சக்தியின் செயல் என்று எடுத்துக் காட்டுகிறார்.

சமஸ்கிருதத்திற்கு எதிரான கேள்விகள் எழுந்த போது, அவர் அளித்த பதில் இதுவே  – சமஸ்கிருதம் அனைத்து பாரத மொழிகளுக்கும் சொந்தமானது, சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களை நியாயப்படுத்தினார்.

இது மட்டுமல்லாமல், நேர்மை, உண்மை மற்றும் சமூக நீதியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு போதித்த மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜர், சுப்பிரமணிய பாரதியார் போன்றோர் சுதந்திரத்துக்காக பட்ட கஷ்டங்களையும், தியாகங்களையும் பொது ஜனங்களிடம் எடுத்து சொல்லி, தேச பக்தியை உருவாக்கி, தேசத்துக்கான தன் கடமையை ஆற்றினார்.

தமிழக மக்கள் வாரியாரை, 64 வது நாயன்மாராக கருதுகின்றனர். அவரது புனித ஆன்மா, 1993 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி, இறைவனின் திருவடிகளை அடைந்தது. தமிழ் பூமியை வேதங்களின் பூமியாக என்றும் இருக்க செய்ய, தன் சீடர்கள், பக்தர்கள் மற்றும் சொற்பொழிவுகளை விட்டுச் சென்றிருக்கிறார், கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.  

  • Dr M விஜயா

Share it if you like it