கோவையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை வெரைட்டி ஹால் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்காக சிறுவர்கள் வந்திருக்கிறார்கள். அப்போது, அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஞானசேகர் என்பவர், அச்சிறுவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி இருக்கிறார். இத்தகவல், ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து அமைப்பினர் மத்தியில் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து, ஹிந்து அமைப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் துணை கமிஷனர், ஹிந்து அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சிறுவர்களை தாக்கிய ஞானசேகரிடம் உரிய விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து, ஞானசேகர் மீது ஹிந்து அமைப்பினர் புகார் அளித்து விட்டு கலைந்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக, ஞானசேகர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.