காரில் பிரஸ் ஸ்டிக்கர்… கடத்தியது ரேஷன் அரிசி… வி.சிறுத்தை ஒன்றிய பொறுப்பாளர் சாதிக் கைது!

காரில் பிரஸ் ஸ்டிக்கர்… கடத்தியது ரேஷன் அரிசி… வி.சிறுத்தை ஒன்றிய பொறுப்பாளர் சாதிக் கைது!

Share it if you like it

காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, ரேஷன் அரிசியை கடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சாதிக்கை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலையைச் சேர்ந்தவர் சாதிக். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர், பொள்ளாச்சி பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். அந்த வகையில், நேற்று முன்தினமும் வழக்கம்போல ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்குக் கடத்திச் சென்றிருக்கிறார். காரில் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தார்.

இந்த சூழலில், பொள்ளாச்சி அருகேயுள்ள சோதனைச் சாவடியில் குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் மற்றும் பொள்ளாச்சி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வந்த சாதிக்கின் காரையும் அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். இதில், காருக்குள் 4 மூட்டை அரிசி இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த எடை 200 கிலோ. இதுகுறித்து விசாரித்தபோது, ரேஷன் அரிசி என்பதும், கேரளாவுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

மேலும், சாதிக்கிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ‘பிரஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் போலீஸார் பிடிக்க மாட்டார்கள் என்று நினைத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, சாதிக்கின் காரை பறிமுதல் செய்த போலீஸார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சாதிக்கையும் கைது செய்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it