கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் ஏராளமான பட்டாசுகள் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தன. இங்கு சுமார் 15 பேர் பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். இந்த சூழலில், இன்று காலை 10 மணியளவில் பட்டாசு குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமானது. மேலும், இந்த பட்டாசு குடோன் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்ததால், அருகிலிருந்த 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமானது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் நீண்ட நேரம் போராடி தீயை அணைந்தனர். பிறகு, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும், சம்பவ இடத்திலேயே பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ரித்தீஸ், ஹோட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி, வெல்டிங் கடை உரிமையாளர்கள் இம்ரான், இப்ராகிம் ஆகிய 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். உயிருடன் மீட்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தகவலறிந்த மாவட்ட கலெக்டர் சரயு, சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.