கர்ம வீரர் காமராஜர்

கர்ம வீரர் காமராஜர்

Share it if you like it

கர்ம வீரர் காமராஜர்

கர்ம வீரர் காமராஜர், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் நேர்மையான, அர்ப்பணிப்புடன் சேவை செய்ததற்காக, காலம் கடந்து, இன்றைக்கும், ஒரு சிறந்த தலைவருக்கான உதாரணமாக, நினைவு கூறப் படுகிறார். அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன் மாதிரியாக இருந்தார், காமராஜர். தமிழக முதல்வராக, அவர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, மாநிலத்தின் நலனுக்காக, பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தார்.

தந்தை குமாரசாமிக்கும் – தாயார் சிவகாமிக்கும், 15 ஜூலை 1903 அன்று, பிறந்தார் காமராஜர்.

மிகுந்த தேச பக்தி கொண்ட இந்த சிறுவர், குடும்ப பொருளாதார சிக்கலால் ஆறாம் வகுப்பில் படிப்பை விட்டு விட்டு, தனது மாமாவின் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, வாய்ப்பு கிடைத்ததும், 16 வயதில் இந்திய சுதந்திரத்திற்கான போராட்ட களத்தில் இறங்கினார், காமராஜர். காங்கிரஸில் இணைந்து, ராஜாஜியின் தலைமையில் நடை பெற்ற, வேதாரண்யம் உப்பு  சத்தியாகிரகத்தில் (சட்ட மறுப்பு) பங்கேற்று, அதற்காக கைது செய்யப் பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு அலிகர் சிறையில் அடைக்கப் பட்டார்.

1919ல் நடந்த, ஜாலியன் வாலா பாக் (Jallian Wala Bagh) படுகொலையை எதிர்த்து, நாடு முழுவதிலும் போராட்டம் நடை பெற்றிருந்த நேரத்தில், காமராஜருக்கு டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களின் கண்டன உரையை விருதுநகரில் கேட்க வாய்ப்பு கிடைத்தது. வரதராஜுலுவின் சொற்பொழிவு, அந்த இளைஞரின் வாழ்க்கை கண்ணோட்டத்தையே மாற்றி விட்டது, தேசத்திற்கான கொள்கையை வழி காட்டியது.

1936ல், சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். சத்தியமூர்த்தியின் சீடராக இருந்த காமராஜர், செயலாளராக பொறுப்பேற்று, 1940 ல் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1920ல், காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை (Non co-operation Movement) தொடங்கினார்.

1923ல், தமிழ் நாட்டில் காமராஜர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றார்.

1929ல், காங்கிரஸ் கட்சியின் முழு நேர உறுப்பினரானார், காமராஜர்.

1940ல், சத்தியாகிரக போராட்டத்தை நடத்துவதற்கு, காந்தியிடம் அனுமதி பெற, வார்தா (Wardha) செல்லும் வழியில் கைது செய்யப் பட்டு, வேலூர் சிறையில் மீண்டும் அடைக்கப் பட்டார்.

1942ல், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (Quit India Movement) கலந்து கொண்டதற்காக, அமராவதி சிறையில் அடைக்கப் பட்டார்.

1945ல், விடுதலை ஆன பின்பு, மீண்டும் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.

1947ல், இந்தியா சுதந்திரம் அடைந்ததும், சத்தியமூர்த்தி அவர்களின் வீட்டில் காமராஜர், இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.

1949ல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரானார்.

1952ல், ராஜாஜியை முதலமைச்சராக பதவி ஏற்க செய்தார். பின்னர், ராஜாஜி பதவி இறங்கியதும், 30 மார்ச் 1954 அன்று, காமராஜர் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

1957 மற்றும் 1962 தேர்தல்களில், காமராஜரே மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதலமைச்சரானார்.

காங்கிரஸின் மூத்த தலைவரான காமராஜர், முழு நேரமாக காங்கிரஸ் கமிட்டியில் பணியாற்ற விரும்பி, ‘காமராஜர் திட்டத்தின்’ கீழ், 1963ல் பதவி இறங்கியதும், பக்தவத்சலத்தை முதலமைச்சராக பதவி அமரச் செய்தார்.

முதலமைச்சராக பதவி ஏற்றதும், சமூகத்தின் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை, பள்ளிகளுக்கு வர ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் சில காரணங்களால் மூடப்பட்ட ஆயிரக்கணக்கான பள்ளிகளை, மீண்டும் சீரமைத்து திறந்தது மட்டுமல்லாமல், மதிய உணவு திட்டத்தையும் தொடங்கினார். “கல்விக்கான உணவு” திட்டத்தின் மூலம், பல குழந்தைகளுக்கு உணவளித்து, கல்வியை கற்க செய்தார், பெருந்தலைவர் காமராஜர்.

“உண்ணுவதற்கு உணவில்லாத போது, கல்வி எதற்கு?” என இருந்த மக்களுக்கு, இலவச கல்வியை அறிவித்து, அரசாங்க செலவில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, மதிய உணவும் தரப் படும் என்ற அறிக்கையை விட்டதும், கல்வியை நினைத்து கூட பார்க்க முடியாத வறுமை நிலையில் இருந்த குழந்தைகளும், பள்ளி  சென்று தன் வயிற்றுப் பசி மற்றும் அறிவுப் பசியை ஆற்றி, பயன் அடைந்தார்கள்.

முதலமைச்சராக இருந்த காலத்தில், அவரால் அறிமுகப் படுத்தப்பட்ட மேம்பாட்டு திட்டங்களில், வேளாண் நீர்ப்பாசன திட்டங்கள், ஊரக வளர்ச்சி பணிகள், அணைகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டுதல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மக்களுக்கு, சேவைகள் பல செய்திருந்தாலும், தமிழக மக்கள் இந்த உண்மையான ஆளுமைக்கு மரியாதை கொடுக்க தவறி விட்டார்கள். அவர் போட்டியிட்ட தேர்தலில், அவருக்கு வாக்களிக்காமல், அவரை தோற்க வைத்தார்கள். 1967 தேர்தலில், மீண்டும் விருதுநகர் தொகுதி வேட்பாளராக, நின்றார். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு விபத்தில் காயம் அடைந்த காமராஜர், தேர்தல் பிரச்சாரம் செய்ய இயலாத நிலைமை, அந்த தேர்தலில் 1285 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

காமராஜர், தனது முழு வாழ்க்கையையும், இந்திய சுதந்திரம், தமிழக மக்களின் நலனுக்காக அர்ப்பணித்தவர்.

தனது முதலமைச்சர் பதவியை, தனிப்பட்ட நலன்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தியதில்லை, காமராஜர். எல்லா வீடுகளிலும், தண்ணீர் இணைப்பு இருக்கச் செய்த அவர், தண்ணீர் இணைப்புக்காக போதுமான பணம் அவரிடம் இல்லாத நிலையில், பதவி அதிகாரத்தை, சொந்த பயனுக்காக பயன் படுத்த கூடாது என்ற கொள்கையுடன் இருந்த காமராஜர், தன் வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு தர முடியாமல், அவரது தாயார் தெருவில் இருக்கும் பொது கைப் பம்பிலிருந்து (hand pump) தண்ணீரை சேகரித்து வந்தார்.

அத்தகைய ஊழலற்ற நபர், என்றைக்கும் தனது தனிப்பட்ட வசதிகளைப் பற்றி, கவலைப்பட்டதில்லை. திருமணம் செய்து கொள்ளாமல், தமிழ் மண்ணிற்கும், பாரத தேசத்திற்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களின் உயர்வுக்காகவும், வருங்கால சமுதாயத்தின் கல்வி திறனுக்காகவும் பாடு பட்டு, 72 வயதில், 2 அக்டோபர் 1975 ல், இறைவனடி சேர்ந்தார்.

  • Dr M விஜயா

Share it if you like it