மணமேடைக்கு அருகே மதுபான விற்பனை – திமுகவின் மாஸ்டர் பிளான்
தமிழகத்தை ஆளும் திமுக அரசு தங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்காக இன்று காலை ஒரு சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி திருமண நிகழ்ச்சிகள், தேசிய மாநாடுகள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுவரை பார் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த அனுமதி இனி திருமண நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், தேசிய மாநாடுகள் நடைபெறும் அரங்குகளிலும் கிடைக்கும். ஒரு நாள் நிகழ்ச்சி என்றாலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மது விலக்குத்துறை அதிகாரிகளிடம் முறையாக இதற்கு அனுமதி பெறலாம் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் பல சமுதாய சீர்கேடுகள் அதிகரித்து வரும் நிலையில் திமுக அரசின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றினால் 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என பொதுமக்களுக்கு வாக்களித்தது. ஆனால் தற்போது பெண்கள், குழந்தைகள் கூடியிருக்கும் திருமண நிகழ்ச்சிகளில் மதுவிருந்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆளும் திமுகவின் இரட்டை வேஷத்திற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
திமுக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலர் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து இந்த அரசாணை குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், மாநாடுகளில் மதுபானம் பறிமாறவும் பயன்படுத்தவும் அனுமதியில்லை. விளையாட்டு மைதானங்களில் சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது மட்டுமே மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த விளக்கம் தெளிவில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுவாக தமிழகத்தில் நடக்கும் சில திருமண நிகழ்ச்சிகளில் மதுபான விருந்துகள் நடப்பது வாடிக்கையான நிகழ்ச்சிதான். ஆனால் அவை பெரும்பாலும் வெளிப்படையாக நடப்பதில்லை. திருமணத்திற்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மறைமுகமாக மதுபான விருந்துகள் நடைபெறும். சில இடங்களில் திருமண நிகழ்ச்சிகளில் மது அருந்திவிட்டு கலாட்டா செய்பவர்களால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் திருமணமே நின்று போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் குடிப்பழக்கம். தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள், சாலை விபத்துகள், தற்கொலைகள், குடும்ப தகராறு, குடிமகன்களால் சாலைகளில் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சமுதாய சீர்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதை தடுக்க தமிழகத்தை ஆட்சி செய்த எந்த கட்சியும் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல் லாபத்துக்காக முன்பு மதுவிலக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் மாநில அரசே மதுபான விற்பனையை எடுத்து நடத்த துவங்கிவிட்டது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளால் கள்ளச்சாராயம் பிரச்சனை ஒடுக்கப்பட்டாலும் பொதுமக்களின் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை பற்றி எந்த அரசும் கவலைப்படுவதில்லை. மதுபான விற்பனை மூலம் அரசுக்கு வரும் கோடிக்கணக்கான வருவாய் மட்டுமே அவர்களது கவனத்தில் உள்ளது. குடிக்கு எதிரான அவர்களது நடவடிக்கை மேடை பேச்சுடன் நின்று போகிறது. அதற்கு சிறந்த உதாரணம் திமுகவை சேர்ந்த கனிமொழி அவர்கள் தமிழகத்தில் தான் இளம் விதவைகள் உள்ளனர். அதற்கு காரணம் டாஸ்மாக் அதனை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் டாஸ்மாக் கடை மூட படும் என பேசி இருந்தார்.
மேலும், தமிழகத்தில் அதிகரிக்கும் குடிப்பழக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் குடும்ப பெண்கள் தான். பல இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் பகிரங்கமாகவே போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்கள் ஒன்று சேர்ந்து போராடி டாஸ்மாக் கடைகளை மூடிய சம்பவங்களும் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்தது. ஆனால் அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மூடிய டாஸ்மாக் கடைகள் சில நாட்களில் மீண்டும் செயல்பட துவங்கின.
இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொண்ட திமுக தன் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் படிப்படியாக மது ஆலைகள் மூடப்படும். முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் அவ்வாறு நடந்ததா என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
இந்த சூழ்நிலையில் பெண்களுக்கு மேலும் பிரச்சனையை அதிகரிக்க செய்யும் வகையில் திருமண நிகழ்ச்சிகள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த திமுக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
அண்ணாமலை கண்டனம்
திருமண நிகழ்ச்சிகள், விளையாட்டு மைதானங்கள், மாநாடுகளில் மதுபான விருந்துக்கு அனுமதி வழங்கும் திமுக அரசின் அரசாணைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்போம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக தற்போது மது விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மது ஆலைகளின் வருமானத்தை அதிகரிக்க சமுதாய சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக அரசு உடனடியாக இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மக்கள் நலனுக்காக நல்ல சாலை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அலட்சியம் காட்டி வரும் திமுக அரசு தனக்கான வருவாய் ஈட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது என்பதற்கு இன்று வெளியான அரசாணையே சிறந்த ஆதாரம். வரும் தேர்தல்களில் தமிழக மக்கள் இதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என நம்புவோம்.