100 வருடம் பாரம்பரியமான கோயிலை இடித்தேன். ஓட்டு வராது என்று தெரியும். ஆனாலும், ஓட்டு எப்படி வாங்க வேண்டும், வரவைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்று சொல்லி ஹிந்துக்களை இழிவாக பேசியிருக்கிறார் டி.ஆர்.பாலு.
மதுரையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் திறந்த வெளி மாநாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் பேச்சுகள் ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் நாராசமாக இருந்தன. இவரது பேச்சைக் கேட்டு கூட்டத்தில் இருந்த பலரும் முகம் சுளித்தனர்.
டி.ஆர்.பாலு பேசுகையில், “ராமேஸ்வரம் கோயிலுக்குள் இருந்த 3 தீர்த்தங்கள் பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமல் இடம் மாற்றி வைக்கப்பட்டன. இது மத நம்பிக்கையை பாதிக்காதா?” என்று கேள்வியவர், “எனது தொகுதியில் ஜி.எஸ்.டி. ரோட்டில் இருந்த 100 வருடங்கள் பழமையான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய 3 தெய்வங்களின் கோயில்களையும் இடித்தேன். இதனால் ஓட்டு வராது என்று பலரும் கூறினார்கள். அது எனக்கும் தெரியும். ஆனாலும், ஓட்டு எப்படி வாங்க வேண்டும், வரவைக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதேபோல, கங்கையிலும், காவிரியிலும், கொள்ளிடத்திலும் வெடிவைத்து தகர்த்து பாலம் கட்டினேன். கடவுள் என்னை ஒன்றும் செய்யவில்லையே. ராமர் பாலம் உள்ளது என்பதை மக்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள் என்றால், இந்நேரம் இத்திட்டத்திற்கு எதிராக புரட்சி வெடித்திருக்க வேண்டும் அல்லவா” என்று பேசியிருக்கிறார்.
அதாவது, தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே பகவான் ராமர், தனது மனைவி சீதா தேவியை காப்பாற்றுவதற்காக வானரங்களின் துணையோடு பாலம் கட்டியதாக இதிகாசம் சொல்கிறது. அதற்கேற்றார்போல், இராமேஸ்வரத்தில் ராமர் பாதமும் இருக்கிறது. இதை ஹிந்துக்கள் இன்றளவும் வணங்கி வருகின்றனர். அதேபோல, ராமர் பாலம் இருப்பதையும் நம்பி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு துடித்து வருகிறது. ஆகவே, ராமர் பாலம் இருப்பது உண்மையென்றால் இந்நேரம் ஹிந்துக்களின் புரட்சி வெடித்திருக்க வேண்டுமே என்று டி.ஆர்.பாலு கேட்டிருக்கிறார். மேலும், 100 வருட கோயிலை இடித்ததாகவும் மார்தட்டிக் கொண்டிருக்கும் பாலு, காவிரி, கங்கை, கொள்ளிடத்தில் வெடிவைத்து தகர்த்ததாகவும் எகத்தாளமாகக் கூறியிருக்கிறார். இதன் மூலம் ஹிந்துக்கள் சொரணையற்றவர்கள், அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லாமல் சொல்லி, ஹிந்துக்களை இழிவுபடுத்தி இருக்கிறார் டி.ஆர்.பாலு.
ஹிந்துக்களுக்கு என்றுதான் விழிப்புணர்வு வருமோ?