காலையில் ராஜினாமா அறிவிப்பு… மாலையில் நீடிப்பு அறிவிப்பு… பல்டியடித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வால் சலசலப்பு!

காலையில் ராஜினாமா அறிவிப்பு… மாலையில் நீடிப்பு அறிவிப்பு… பல்டியடித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வால் சலசலப்பு!

Share it if you like it

மக்களுக்கு நல்லது எதுவும் செய்ய முடியவில்லை. ஆகவே, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று மதுரை தெற்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பூமிநாதன் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க.வில் இருந்து பிரிந்து ம.தி.மு.க.வை வைகோ தொடங்கிய காலம் முதல், அவருடன் அரசியல் பயணம் செய்பவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன். இவரது விசுவாசத்தை பார்த்த வைகோ, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தந்தார். பூமிநாதனும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியி்ட்டு வெற்றிபெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார். அப்போது பேசிய அவர், ‘3 முறை போட்டியிட்டு தோல்வியடைந்தேன். 4-வது முறை வெற்றி பெற்றிருக்கிறேன். என்னை வெற்றிபெற வைத்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்றார்.

இந்த நிலையில், நேற்று காலை நடந்த மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் ஆவேசமாக பேசிய பூமிநாதன், “மக்களுக்கு சேவை செய்யவே இந்த பதவிக்கு வந்தேன். மாநகராட்சிக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வருகிறேன். நேரிலும் சந்தித்து அதிகாரிகளிடம் முறையிடுகிறேன். ஆனால், தொகுதி மக்களுடைய அடிப்படை பிரச்னைகளுக்குக்கூட தீர்வு காண முடியவில்லை. மக்களுக்கு உதவாத பதவியை பெருமைக்கு வைத்து என்ன பயன்? எனவே, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யலாம் என்று நினைக்கிறேன். ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் தரப் போகிறேன். அதற்கு முன்பாக வைகோவிடம் தகவல் தெரிவிக்கப் போகிறேன்” என்றார்.

ம.தி.மு.க.வைச் சேர்ந்த பூமிநாதனின் இப்பேச்சால் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்திய நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த பூமிநாதன், ‘என்னுடைய வருத்தங்களைத்தான் மாநகராட்சி கூட்டத்தில் பதிவு செய்தேன். தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வேறுமாதிரியாக வந்துவிட்டது. எம்.எல்.ஏ. பதவியில் தொடர்ந்து நீடித்து மக்களுக்கு சேவையாற்றுவேன்’ என்று கூறினார்.


Share it if you like it