தமிழக நிதியமைச்சர் கார் மீது, பா.ஜ.க.வினர் செருப்பு வீச காரணம் என்ன என்பது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு பயங்கர தாக்குதல் நடந்தது. இச்சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்த நிலையில், 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிரிழந்த இந்திய வீரர்களில் தமிழகத்தின் மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரும் ஒருவர். இவரது உடல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, இன்று காலை மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தது.
ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவதற்காக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விமான நிலையத்துக்கு வந்திருந்தார். அதேபோல, லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, பா.ஜ.க. மதுரை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சரவணன் தலைமையில் திரளான பா.ஜ.க.வினரும் வந்திருந்தனர். அப்போது, லட்சுமணன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்ட பிறகு, தங்களையும் மரியாதை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தினர்.
இதன் காரணமாக, பா.ஜ.க.வினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பா.ஜ.க.வினரை அடிப்பதுபோல சீறிப்பாய்ந்து வந்தார். மேலும், பா.ஜ.க.வினரை அவதூறாகப் பேசியதாகவும் தெரிகிறது. இதனால், பா.ஜ.க.வினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பிறகு, ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி விட்டு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரில் புறப்பட்டுச் சென்றனர்.
இதனிடையே, விமான நிலையத்திற்குள் பா.ஜ.க.வினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே நடந்த சண்டை குறித்த தகவல், ஏர்போர்ட்டுக்கு வெளியே நின்றிருந்த பா.ஜ.க.வினருக்கு தெரியவந்திருக்கிறது. இதனால், ஆவேசமடைந்த பா.ஜ.க.வினர் பி.டி.ஆர். கார் வரும்போது, காரை மறித்து தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது, கூட்டத்தில் இருந்த யாரோ ஒரு பெண் பி.டி.ஆர். கார் மீது செருப்பைத் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. உடனே, அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸார், பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு, அமைச்சரின் காரை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் மதுரை விமான நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.