தி.மு.க. ஆட்சியில் கறார் கமிஷன்: பொறியாளர் சஸ்பெண்ட்!

தி.மு.க. ஆட்சியில் கறார் கமிஷன்: பொறியாளர் சஸ்பெண்ட்!

Share it if you like it

தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தி.மு.க. நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள் வரை கமிஷன் கேட்பதால் அதிகாரிகள் விழிபிதுங்கி வருகின்றனர். இந்த சூழலில், ஒப்பந்தக்காரரிடம் மதுரை கட்டுமானம் மற்றும் கோட்ட பராமரிப்புத் துறை செயற்பொறியாளர் ரமேஷ்குமார் 50,000 ரூபாய் கமிஷன் வாங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் 6.77 லட்சம் ரூபாயில் கழிப்பறை கட்ட டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை ஒப்பந்ததாரர் முருகன் என்பவர் எடுத்திருந்தார். அவரிடம் தனக்கு கமிஷனாக 75,000 ரூபாய் தரும்படி பொறியாளர் ரமேஷ்குமார் கமிஷன் கேட்டிருக்கிறார். ஆனால், தனக்கே அந்தளவுக்கு லாபம் கிடைக்கவில்லை என்று முருகன் கூறியிருக்கிறார். இதையடுத்து நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 50,000 ரூபாய்க்கு பேரம் படிந்தது. தொடர்ந்து, 50,000 ரூபாயை பொறியாளர் ரமேஷ்குமாரிடம் கொடுத்த கான்ட்ராக்டர் முருகன், அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

பின்னர், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவில், பணத்தை பார்த்துக் கொண்டே, இதென்ன கணக்கு என்று ரமேஷ்குமார் கேட்க, எனக்குக் கிடைத்த லாபமே 32,000 ரூபாய்தான் என்று முருகன் கூறுகிறார். தொடர்ந்து, உதவி பொறியாளர் மூலம் எஸ்.இ.க்கு 2 சதவிகித கமிஷன் கொடுத்திருக்கிறோம். ஒரு சதவிகித கமிஷன் கொடுத்ததற்கு எஸ்.இ. கையெழுத்திட மறுத்து விட்டதாக கூறியபடியே, 50,000 ரூபாயை ரமேஷ்குமாரிடம் கமிஷனாக கொடுக்கிறார் முருகன். அப்போதும், இதுக்கு 60,000, அதுக்கு 15,000 என மொத்தமாக 75,000 ரூபாய் எதிர்பார்த்தேன்’ என்று கூறியபடியே பணத்தை வாங்கிக் கொண்ட ரமேஷ்குமார், தட்டில் சாப்பாட்டை போட்டு சாப்பிடத் தொடங்குகிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொறியாளர் ரமேஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி உத்தரவிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தி.மு.க.வின் லஞ்ச லாவண்யத்தை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான நடிகை குஷ்பு தமிழக அரசின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it