அரசு பள்ளி இடம் ஆக்கிரமிப்பு: தி.மு.க. பஞ். தலைவரின் கணவர் ‘தில்’!

அரசு பள்ளி இடம் ஆக்கிரமிப்பு: தி.மு.க. பஞ். தலைவரின் கணவர் ‘தில்’!

Share it if you like it

மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளி இடத்தை தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் குடிசை போட்டு ஆக்கிரமித்திருக்கும் சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது அல்லிகுண்டம் ஊராட்சி. இவ்வூராட்சியின் தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த விஜயா. இவரது கணவர் கண்ணன். இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இப்பள்ளியின் கட்டடங்களில் ஒன்று சேதமடைந்திருந்தது. ஆகவே, அக்கட்டடம் இடிக்கப்பட்டது. அதேசமயம், மற்ற கட்டடங்களும் உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பள்ளிக் கட்டடங்களை பராமரிக்கவும், ஏற்கெனவே இருந்த கட்டடத்தை இடித்த இடத்தில் புதிய கட்டடம் கட்டவும் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கட்டடப் பணிகளை துவக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், ஊராட்சி மன்றத் தலைவர் விஜயாவின் கணவர் கண்ணன், மேற்கண்ட பள்ளி இடத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்திருக்கிறார். இதுதான் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து ஊர்மக்கள் கூறுகையில், புதிய கட்டடம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டது. இதை எடுப்பதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், டெண்டர் கைமாறி அ.தி.மு.க.வைச் சேர்ந்தவருக்கு போய் விட்டது. இதனால், அதிருப்தியடைந்த கண்ணன், பள்ளி இடத்தை ஆக்கிரமித்து குடிசை போட்டு விட்டார். இதனால், கட்டடப் பணிகள் நடக்காமல் தாமதமாகி வருகிறது என்றார்கள்.

ஆனால், கண்ணனின் பதிலோ வேறு மாதிரியாக இருக்கிறது. பழைய கட்டடத்தை இடித்த பகுதியில் புதிய கட்டடத்தின் நீள அகலத்திற்கு ஏற்ப இடம் இல்லை. ஆகவே, மாற்று இடத்தில் கட்டடத்தை கட்ட வேண்டிய சூழல் இருக்கிறது. இதற்கு ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அதுவரை பள்ளி வகுப்புகள் நடக்க வேண்டும் என்பதற்காக, தற்காலிகமாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிசை அமைத்திருக்கிறோம் என்கிறார். அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் குடிசை அமைத்திருப்பதை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறோம். ஜனவரி 30-ம் தேதி அக்குடிசையை அகற்ற உள்ளோம் என்கிறார்கள்.

ஆக, தி.மு.க.வினரின் நில அபகரிப்பு தொடங்கி விட்டது. பழைய தி.மு.க. ஆட்சி மீண்டும் அரங்கேறத் தொடங்கி விட்டது என்பது இச்சம்பவத்தின் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.


Share it if you like it