கூடல்மலை சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் அற்புதங்கள்!

கூடல்மலை சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் அற்புதங்கள்!

Share it if you like it

சூட்டுக்கோல் என்பது செம்பினால் செய்யப்பட்ட ஒரு கோலாகும். அந்தக் கோலால் நல்லவர்களுக்கு நன்மையும், தீயவர்களுக்கு தண்டனையும் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். இந்த சூட்டுக்கோல் மன்னார்குடி மகான் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளிடம் இருந்தது. அவரது காலத்திற்கு பிறகு, அவரது சீடர் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகளிடம் இருந்தது. அவரது காலத்திற்கு பிறகு அவரது சீடர் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் இருந்தது. தற்போது அந்த சூட்டுக்கோல் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள கூடல்மலை அடிவாரத்தில், மாயாண்டி சுவாமிகள் சமாதியில் உள்ளது.

இந்த மகானை பற்றி காண்போம்…

ஒரு முறை மதுரையில் இருந்து மானாமதுரைக்கு ரயிலில் பயணித்தார் மாயாண்டி சுவாமிகள். மனிதர்கள்தான் டிக்கெட் எடுத்து பயணிப்பார்கள். மகான்களுக்கு ஏது டிக்கெட்? ஒரு மூலையில் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்தார். வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் ஒருவர் மாயாண்டி சுவாமிகளிடம் வந்து, டிக்கெட் கேட்டார். சுவாமிகளிடம் இருந்து பதில் இல்லை. தியானத்தில் இருந்த சுவாமிகளை வலுக்கட்டாயமாக எழுப்பி, டிக்கெட் எங்கே? என்று கடுமையான குரலில் கேட்டிருக்கிறார். மாயாண்டி சுவாமிகளின் முகத்தில் புன்சிரிப்பைத் தவிர, வேறு பதில் இல்லை. பிறகு, கண்களை மூடி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர், இவரை எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்ற முடிவுடன், அடர்ந்த ஒரு காட்டுப் பகுதியில் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். பின்னர், மாயாண்டு சுவாமிகளை வலுக்கட்டாயமாக வண்டியிருந்து கீழே தள்ளினார். உடனிருந்த பல பயணிகள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும், அந்த டிக்கெட் பரிசோதகர் கண்கொள்ளவே இல்லை. ஆனால், சுவாமிகளோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், சற்றுத் தொலைவு நடந்து சென்று, அங்கிருந்த ஆல மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்தார். ரயில் மீண்டும் புறப்படுவதற்காக விசில் ஊதப்பட்டது; பச்சைக் கொடி காட்டப்பட்டது. ஆனால், ரயில் புறப்படுவதாக இல்லை.

ரயில்வேயில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு மட்டும் இதன் காரணம் புரிந்தது. ‘சுவாமிகளை இறக்கிவிட்டதனால்தான் இப்படி அவஸ்தைப்படுகிறோம்! வாருங்கள், அவரிடம் அவரிடம் போய் மன்னிப்புக் கேட்டு, அவரையும் அழைத்து வந்து ரயிலைக் கிளப்புவோம்!’ என்று சொல்ல, வண்டியின் டிரைவர் உட்பட சில பணியாளர்களும் பயணிகளும் ஆல மரத்தின் அருகே சென்றனர். தியானத்தில் இருந்த சுவாமிகள் திடீரெனக் கண் திறந்தார். ‘என்ன அப்பு? கூட்டமா வந்திருக்கீங்க! வண்டி மானாமதுரைக்குப் போகணுமா?’ என்று கேட்டார் புன்னகையுடன். அனைவரும் டிக்கெட் பரிசோதகரின் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ‘ஆமா சாமீ… மானாமதுரைக்குப் போகணும். இந்த இடம் காடா இருக்கு. பல பேரு குடும்பம் குட்டியோட இருக்கோம்!’ என்று சொல்ல, ‘அப்படியா?… இதோ வந்திட்டேன் அப்பு!’ என்றபடி துள்ளிக் குதித்து ஓட்டமாகக் கிளம்பிய சுவாமிகள் ரயிலில் ஏறிக் கொண்டார். மீண்டும் ஒரு மூலையில் அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்தார். அடுத்த விநாடியே ரயில் பெரும் சத்தத்துடன் கிளம்பியது. மானாமதுரை வந்தது. சுவாமிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்ட அந்த வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் வந்து, சுவாமிகள் திருப்பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். இப்படி மாயாண்டி சுவாமிகளின் அற்புதங்கள் எண்ணற்றவை.

இதேபோல, மதுரைக்கு அருகே அழகாபுரி கிராமத்தில் ராமசாமி என்கிற அந்தணர் தன் இல்லாளுடன் வசித்து வந்தார். இந்தத் தம்பதிக்கு 9 குழந்தைகள். ஒரு நாள் இவர்கள் இல்லத்துக்கு எழுந்தருளினார் மாயாண்டி சுவாமிகள். தம்பதியரை ஆசிர்வதித்து, ‘உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறப்பான்! உலகம் மேன்மை அடைவதற்கு வேள்விகள் செய்வான்! மாதா புவனேஸ்வரியின் அருளை பூரணமாகப் பெறுவான்! அவன் சிறு பிராயம் வரை உங்களிடம் இருப்பான். பிறகு அவன் இந்த உலகத்துக்கே சொந்தம் ஆவான்! அவனுக்கு சுப்ரமணியம் என்று பெயர் வை!’ என்று சொல்லிப் போனார். அதன்படி, ராமசாமி தம்பதிக்குப் பத்தாவது பிள்ளையாகப் பிறந்த சுப்ரமணியனே, ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் ஆனார்! மாயாண்டி சுவாமிகளின் திருவாக்குப்படி மாதா புவனேஸ்வரியின் அருளுக்குப் பாத்திரமானார்! சேலம், புதுக்கோட்டை, சென்னை சேலையூர் போன்ற இடங்களில் ஸ்கந்தாஸ்ரம் அமைத்து, மாபெரும் வேள்விகள் நடத்தி, சித்தியடைந்தார். அதேபோல, ‘காசு கொடுத்து இவன் பேச்சை உலகமே கேட்கும்!’ என்று மாயாண்டி சுவாமிகள் ஆசிர்வதித்த சிறுவன்தான், பிற்காலத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் ஆனார்! இந்த நன்றியை மறக்காத வாரியார் சுவாமிகள் 1987-ம் ஆண்டு நடந்த சுவாமிகளின் குருபூஜையில் கலந்துகொண்டு, அவரது சிறப்புகளைக் விரித்துரைத்தார்.

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை (1875 – 1936) அக்காலத்தில் தலைசிறந்த மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வித்வானாக விளங்கியவர். அவர் ஒரு முறை மதுரையில் சுவாமிகளை பார்த்தார். ‘நீ பெரிய யோகி குடும்பத்தைச் சேர்ந்தவன்! எனவே உலக இன்பத்தில் மயக்கம் கொள்ளாதே!’ என்று அருளினார் சுவாமிகள். அதோடு, ‘முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் ஒரு மண்டலம் தங்கி, வழிபாடு செய்! ஏழைகளுக்கு இயன்றவரை அன்னதானம் செய்!’ என்று கட்டளையிட்டு அனுப்பி வைத்தார். சூட்டுகோல் சுவாமிகளின் கட்டளையை முடித்த பின்தான் தட்சிணாமூர்த்தி வாழ்வில் ஒரு பிரகாசம் வீசியது. எண்ணற்ற கச்சேரி வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. இதன் பிறகு, வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் மாயாண்டி சுவாமிகளின் சன்னதிக்கு சென்று வழிபட்டு வந்தார்.

மதுரையில் இருளப்ப கோனார் என்பவருக்கு ஆயுள் பலம் குறைவாக இருப்பதாகவும் அவரது வாழ்வு 26 வயதுக்குள் முடிந்துவிடும்! என்றும் சில ஜோசியர்கள் அவரிடம் சொல்லி இருந்தார்கள். இதைக் கேட்டு மனக்கவலையில் இருந்த காலத்தில்தான் மாயாண்டி சுவாமிகளை மதுரை கோரிப்பாளையத்தில் சந்தித்தார் அவர். இருவரும் பார்வையால் பேசிக் கொண்டனர். மாயாண்டி சுவாமிகள் திடீரென இருளப்ப கோனாரை பார்த்துச் சிரித்தார். ‘என்ன அப்பு, ஜோசியக்காரன் சொன்னதைக் கேட்டு கவலையில் இருக்கியா? உனக்கு ஆயுள் உண்டு! இன்னும் நீ நிறைய அறப் பணி செய்ய வேண்டி இருக்கே!’ என்று சுவாமிகள் திருவாய் மலர்ந்தார். ஒருவருடைய ஆயுளையே மாற்றும் திறன் மகான்களுக்கு உண்டு என்பது இருளப்ப கோனார் வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்டது. கட்டிக்குளத்துக்கு மேற்கே கருப்பனேந்தலில் தான் கட்டிய மடத்துக்கு இருளப்ப கோனாரை அழைத்துச் சென்றார் மாயாண்டி சுவாமிகள். ஒரு மண்டல காலம் இருவரும் அங்கேயே தங்கினார்கள். விதிப்படி இருளப்ப கோனார் அனுபவிக்க வேண்டிய அவஸ்தைகளை சுவாமிகளே அனுபவித்தார். ஒரு நாள் முழுதும் மூடிய குழிக்குள் குத்துக்காலிட்டு அமர்ந்து கடும் நிஷ்டையில் அமர்ந்தார். எவரையும் தன் அருகில் வர அனுமதிக்கவில்லை.

மறுநாள் காலை குழிக்குள் இருந்து வெளியே வந்த மாயாண்டி சுவாமிகள், இருளப்ப கோனாரைப் பார்த்துச் சொன்னார், ‘அப்பு, இனிமே உனக்குப் பிரச்னை இல்லை! ஆயுள் பலம் கூடிடுச்சு! தயங்காம ஆன்மீகப் பணி செய்!’ என்றார். தன் உடலில் ஏதோ புது ரத்தம் பாய்வது போல் உணர்ந்தார் இருளப்ப கோனார். அவரது புதுப் பிறவி அந்த நிமிடத்தில் இருந்து துவங்கியது. தன் வாழ்நாளையே நீட்டித்துத் தந்த மாயாண்டி சுவாமிகளின் இறுதிக் காலம் அவரை விட்டு நீங்காமல் இருந்தார் இருளப்ப கோனார். ஒரு முறை, இருந்த இடத்தில் இருந்தபடியே இருளப்ப கோனாருக்கு காசி தரிசனத்தைத் தன் சித்து வேலையால் செய்து காண்பித்தார் சுவாமிகள். இன்னும் 2 ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று 1928-ம் வருடம் புரட்டாசி மாதம் 6-ம் தேதி இருளப்ப கோனார் உட்பட தன் பக்தர்களிடம் தகவல் தெரிவித்தார் மாயாண்டி சுவாமிகள். அதன்படி, 1930-ம் வருடம் புரட்டாசி மாதம் 11-ம் தேதி இருளப்ப கோனாரின் இடது தோளில் சாய்ந்து, ‘அப்பு, இந்த சட்டையைக் கழற்றிவிடலாமா?’ என்று கேட்டுவிட்டு, சமாதி யோகத்தில் ஆழ்ந்தார். சுவாமிகளது ஆன்மா சிவனுடன் இணைந்தது.

நாமும் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள கூடல்மலை சென்று, மாயாண்டி சுவாமிகள் சமாதியில் வழிபடலாமா?


Share it if you like it