தி.மு.க.வினரால் தலித் பஞ். தலைவர் கண்ணீர்!

தி.மு.க.வினரால் தலித் பஞ். தலைவர் கண்ணீர்!

Share it if you like it

தன்னை எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த விடாமல் தடுப்பதோடு, லஞ்சம் வாங்குமாறு தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் வற்புறுத்துவதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கண்ணீருடன் கூறுகிறார் தலித் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து பெண் தலைவர் முருகேஸ்வரி.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது மேலக்கால் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மேலக்கால், கச்சிராயிருப்பு, கீழ மட்டையான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 9 வார்டுகள் உள்ளன. இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி. இவர் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை வார்டு உறுப்பினர்களும், ஊராட்சிச் செயலாளரும் பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், லஞ்சம் வாங்க வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து, மேற்படி நிலவரம் குறித்து கடந்தாண்டு மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்ததோடு தர்ணாவிலும் ஈடுபட்டார் முருகேஸ்வர். இதன் பிறகு, கலெக்டர் அறிவுறுத்தலின்படி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரை நேரில் வரவழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர். ஆனால், இதன் பிறகும் மேலக்கால் ஊராட்சியில் எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் வார்டு உறுப்பினர்கள் சிலர் தடுப்பதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கண்ணீருடன் கூறுகிறார் முருகேஸ்வரி.

மேலும், அரசின் எந்தவொரு திட்டத்திற்கும் வார்டு உறுப்பினர்கள் சிலர் லஞ்சம் கேட்டு தன்னை மிரட்டுவதாகவும், இல்லை என்றால் ஊராட்சி மன்றத்தில் எந்தவொரு பணியும் நடக்க விடமாட்டோம் என்று மிரட்டி வருவதாகவும் குற்றம்சாட்டுகிறார். தவிர, தேசிய கிராமப்புற வேலை திட்டத்தில் பணியாளர்களை சேர்க்க தன்னிடம் கேட்காமலேயே சுமார் 200 பேருக்கு மேல் போலியாக பணியாட்களை தயார் செய்து, அந்த பணத்தை வார்டு உறுப்பினர்கள் சிலர் எடுத்து கொண்டதாகவும் புகார் தெரிவிக்கின்றார்.

இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம்  முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆகவே, ஊராட்சி அலுவலகத்தின் சாவியை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்திருக்கும் முருகேஸ்வரி, ஊராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக குமுறுகிறார். ஆகவே, இந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் நேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். மேலும், இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் கொடுக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தலித் சமூதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது.


Share it if you like it