குலம் காக்கும் குலதெவம் காவல் கொடுக்கும் காவல் தெய்வ வழிபாடு சிறு தெய்வம் பெறுந் தெய்வம் என்று பல்வேறு வழிகளில் உருவ வழிபாடு சிலை வழிபாடு அரூப வழியில் வணங்கப்படுகிறது. அந்த வகையில் உருவ வழிபாடு காணும் மதுரை மஹா முனீஸ்வரன் ஆலயம் தென் மாவட்டங்களில் பிரதான இடம் பெறுகிறது. தென் மாவட்ட மக்களின் பல குடும்பங்கள் தங்கள் குலதெய்வமாக வணங்கும் இந்த மஹா முனீஸ்வரன் ஆலயம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்தின் அருகே வலது புறத்தில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் மொட்டைக் கோபுரத்து மகா முனீஸ்வரர் என்றே பெயர் பலகை இருந்தது. ஆனால் சமீப காலமாக மொட்டை கோபுரம் என்ற வார்த்தை நீக்கப்பட்டு மகா முனீஸ்வரர் என்றே பெயர் பலகை உள்ளது.
மஹா முனீஸ்வரர் வழிபாடு முறை:
பொதுவாக வீட்டில் எந்த ஒரு சுபகாரியம் நடந்தாலும்… புது ஜனனம் (குழந்தை பிறப்பு) என்றால் முதலில் நாங்கள் செல்வது அழகர்கோயில். அங்கேதான் முடி காணிக்கை, காது குத்துவது எல்லாமே. அங்கே தீர்த்த தண்ணீரில் குளித்துவிட்டு பெருமாளை தரிசித்து விட்டு பின்னர் அங்கிருந்து நேராக மதுரை மீனாட்சியம்மன் கோயில் வந்து முதலில் வடக்கு கோபுரத்தில் இருக்கும் எங்கள் முனீஸ்வரர் வழிபாடு செய்யும் வழக்கம் இன்றளவும் பல குடும்பங்களில் இருக்கிறது.
அப்போது நிலமாலை தொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். அதாவது மீனாட்சியம்மனின் வடக்கு கோபுர உச்சியில் இருந்து கீழே எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் ஆலய கோபுரம்வரை பூமாலை தொடுப்பார்கள்.பூஜை பொருட்கள் :பூ, பழம், தேங்காய் வெற்றிலை பாக்கு சந்தனம் விபூதி மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களும். வஸ்தி்ரம் வெள்ளை வேஷ்டி. மற்றும் முனீஸ்வரன் பிரியமான சுருட்டு உள்ளிட்ட பொருட்கள்.
இவர் பால் முனீஸ்வரன் என்று அறியப்படுவதால் இங்கே எந்த உயிர்பலியும் வழக்கில் கிடையாது. எலுமிச்சை தேங்காய் வெண் பூசணி பலி பூஜை மட்டுமே பிரதானம். ஆடு கோழி உள்ளிட்ட உயிர் பலிகள் எல்லாம் அதற்கு பாண்டி முனீஸ்வரர் கோயிலில் செய்வார்கள். .
திரு. நாகலிங்கம் பழநிநாதன்