மஹாராஷ்டிராவில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, அம்மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் ஹரிஹரேஸ்வரர் கடற்கரை அருகே இன்று மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. இந்தப் படகில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர், இது குறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடலோர காவல்படையினரும், , மஹாராஷ்டிரா மாநில கடற்கரை பாதுகாப்புக் குழுவினரும் மேற்படி மர்ம படகை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, அந்த படகில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், 3 துப்பாக்கிகளையும் கைப்பற்றிய அதிகாரிகள், படகில் வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கரை ஒதுங்கிய படகு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அப்படகு ஆஸ்திரேலியா நாட்டில் தயாரிக்கப்பட்டு, ஓமன் நாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், இதுபோன்ற படகுகள் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குபவை என்பதும், நெப்டியூன் கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, துப்பாக்கிகளுடன் படகு கரை ஒதுங்கிய விவகாரம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். குறிப்பாக, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம், இப்படகு குறித்து விசாரணை நடத்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.