பெண் உரிமைக்கு குரல்: சவூதி பெண்ணுக்கு 34 வருட சிறை!

பெண் உரிமைக்கு குரல்: சவூதி பெண்ணுக்கு 34 வருட சிறை!

Share it if you like it

பெண் உரிமை ஆர்வலருக்கு ஆதரவாக ட்விட்டரில் குரல் எழுப்பிய  சவூதி அரேபிய பெண்ணுக்கு, அந்நாட்டு அரசு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது.

சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர் சல்மா அல் ஷெஹாப். 34 வயதாகும் இவர், இங்கிலாந்து நாட்டிலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருமணமான இவர், லண்டலில் தனியாக தங்கி படித்துக் கொண்டிருந்தார். இவர், கடந்த 2021-ம் ஆண்டு, கணவர் மற்றும் 2 மகன்களை பார்ப்பதற்காக சவூதி அரேபியாவுக்குத் திரும்பி வந்தார். அப்போது, அந்நாட்டைச் சேர்ந்த லூஜைன் அல் ஹத்லூல் என்கிற சமூக ஆர்வலர், சவூதி நாட்டுப் பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமைக்காக பிரசாரம் செய்து வந்தார். அவரை அந்நாட்டு அரசு சிறையில் அடைத்தது. இதை எதிர்த்து சல்மா ட்வீட் செய்தார். இந்த ட்வீட் படு வைரலானது.

இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சிவில் மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையிலும், சல்மா சமூக ஊடகங்களை பயன்படுத்தியதாகக் கூறி, சவூதி அதிகாரிகள் கைது செய்து, 6 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றுத் தந்தனர். இதை எதிர்த்து சல்மா மேல் முறையீடு செய்தார். அப்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் வெறும் 2,597 ஃபாலோவர்ஸ் மட்டுமே இருப்பதாகவும், இது எப்படி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கேள்வி எழுப்பினார். ஆனால், இவரது வாதத்திற்கு எதிர்வாதம் செய்த அரசு வழக்கறிஞர், சல்மா இதை மட்டும் செய்யவில்லை, ட்விட்டரில் தனது உண்மையான பெயரை பயன்படுத்தி இருக்கிறார்.

மேலும், தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றம் செய்திருக்கிறார். அதோடு, தவறான, நாட்டுக்கு எதிரான பல்வேறு பதிவுகளை அதிகம் ஷேர் செய்திருக்கிறார். எனவே, ஏற்கெனவே சைபர் குற்றத்தில் ஈடுபட்ட பல் மருத்துவர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனையை விட, அதிகபட்ச தண்டனையை சல்மாவுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விசாரணை முடிவில் சல்மா குற்றவாளி என்று உறுதிசெய்த பயங்கரவாத நீதிமன்றம், அவருக்கு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. சவூதி அரேபியேவில் பெண் உரிமைக்காக போராடிய பெண்ணுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச சிறைத் தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it