மகாராஷ்டிராவில் ஆற்றுக்குள் பஸ் பாய்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலம் இந்தூரிலிருந்து புனே நோக்கி அம்மாநில அரசுப் பேருந்து இன்று புறப்பட்டது. இந்த பஸ்ஸில் 30 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். ஆக்ரா – மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்த பஸ், கால்கட் என்ற இடத்தில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நர்மதா ஆற்று பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. தகவலறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், ஆற்றிலிருந்து பஸ் மீட்கப்பட்டது. எனினும், பஸ்ஸில் பயணம் செய்த 13 பேர் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், “விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. விபத்துப் பகுதியில் மாவட்ட நிர்வாகம் முகாமிட்டிருக்கிறது. இன்னும் சிலரைக் காணவில்லை. அவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்” என்றார். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், விபத்துக்குள்ளான பஸ் மகாராஷ்டிர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமானது என்பதால், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.