மங்கள் பாண்டே

மங்கள் பாண்டே

Share it if you like it

மங்கள் பாண்டே கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் 1827ல் ஜுலை 19ஆம் தேதி மிக வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை திவாகர் பாண்டே ஒரு விவசாயி. நாக்வா கிராம மக்கள் இன்றும் தங்கள் முன்னோராக மங்கள் பாண்டேவயே குறிப்பிடுவர்.

மிக தீவிரமான ஹிந்துவான பாண்டே 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் சிப்பாயாக இணைந்தார். அக்கம்பெனியின் 34வது பிரிவில் பணிபுரிந்தார். இது பெங்கால் ரெஜிமெண்ட் என அழைக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவில் அவரை போலவே வசதியான நிறைய பிராமண இளைஞர்கள் சிப்பாயாக பணிபுரிந்து கொண்டிருந்தனர். தன்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஒரு படிக்கல்லாக இந்த சிப்பாய் பணி இருப்பதாக பாண்டே உற்சாகத்தோட சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தார்.

இப்பிரிவினரே அதன் பிரித்தானிய அலுவலர்களைத் தாக்கி சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 அல்லது இந்திய விடுதலைப் போரை ஆரம்பித்து வைத்தவர்கள்.

சிப்பாய் கலகத்தின் காரணம்:

கிழக்கு இந்திய கம்பெனி புதியதாக அறிமுகப்படுத்திய நிறைய சீர்திருத்தங்கள் அத்தனையும் நியாயமற்ற முறையில் இருந்தது. முதலில் படைவீரர்களுக்கான சம்பளம் மிகக்குறைவாக ஆக்கப்பட்டது.

தீவிர கிருஸ்தவரான கர்னல்
எஸ். வீலர் என்பவர் மிகுந்த வைராக்யத்தோடு படைவீரர்களை உட்கார வைத்து கிருஸ்தவத்தை பற்றி போதிக்க ஆரம்பித்தார். ஹிந்தியிலும், உருதுவிலும் பைபிள் அச்சிடிக்கப்பட்டு கேப்டன் வில்லியம் ஹாலிடேவின் மனைவி மூலமாக அதை படைவீரர்களிடம் வினியோகிக்க வைத்தனர். இது மறைமுகமாக தங்களை மதமாற்றம் செய்யவே செய்யப்பட்டதாக படையில் இருந்த ஹிந்து வீரர்களுக்கிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எல்லா கொடுமையிலும் முக்கியமாக, சவப்பெட்டியின் கடைசி ஆணியாக என்பீல்ட் என்ற துப்பாக்கியை அறிமுகப்படுத்தினர். இதன் குண்டுகளை உள்ளிடுவதற்கு முன் அதன் ரவையை கடித்து தான் உள்ளிடும்படியாக இருக்கும். அவர்கள் வழங்கிய துப்பாக்கி குண்டுகளின் வெடி மருந்துகளில் பசு/பன்றி கொழுப்பு தடவப்பட்டிருந்தது. இதனை அறிந்த இந்திய சிப்பாய்கள் அவற்றிற்கு மாற்றாக தாவர எண்ணையையை தடவுவதாகவும், பசு/பன்றி கொழுப்பு தடவிய ரவைகளை தொடுவதே தங்களின் கைகளால் தொடுவதே தங்களின் மதத்திற்கு எதிரானது என கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இது பற்றி பல முறைகள் மங்கள் பாண்டே ஆங்கிலேயர்களிடம் புகார் அளித்தும் பலனில்லை. ஆங்கிலேயர்கள் பிடிவாதமாக அந்த ரவைகளை மட்டுமே உபயோகப்படுத்த உத்தரவிட்டனர். தாங்கள் அதை செய்ய மாட்டோம் என மங்கள் பாண்டே உள்ளிட்டோர் சொல்லவே, கோபம் அடைந்த ஆங்கிலேயர்கள் மங்கள் பாண்டேவையும், அவருடன் வந்தவர்களையும் தங்களது யூனிபார்ம் மற்றும் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு படையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.

பல மாதங்களாக தொடர்ந்து இந்த கிளர்ச்சிக்கு எந்த பலனும் இல்லாமல் போகவே, இதுவே ஒரு நாள் போராக வெடித்தது. இது முதலில் வங்காளத்தில் தொடங்கி பின்னர் இந்தியா எங்கும் பரவ ஆரம்பித்தது.

தங்களது மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படும் ஐரோப்பியர்களை எதிர்த்து கல்கத்தாவின் பரக்பூரில் மார்ச் 29, 1857 மங்கள் பாண்டே தன்னுடன் மேலும் சிலரை சேர்த்து கொண்டு தங்களது கண்ணில் படும் ஆங்கிலேயர்களை கொல்லப்போவதாக சொல்லி கிளம்பினார்கள்.

இதனை அறிந்து தங்களை அடக்குவதற்காக கப்பலில் படைபிரிவு வந்து கன்டோன்மெண்ட்டில் இறங்கி தகவல் வந்ததும் மங்கள் பாண்டேக்கு ஆத்திரம் அதிகமானது. “வாருங்கள் ஐரோப்பியர்கள் இங்கே உள்ளனர்.. இந்த துப்பாக்கி ரவையை நாம் கடித்தால் நமது மதத்தை இழிவுபடுத்தியவர் ஆவோமே.. அதனால் கைகளில் கிடைக்கும் ஆயுதத்தால் நம் கண்ணில் படும் ஐரோப்பியர்களை கொல்வோம்” என கிளம்பினார். கண்ணில் பட்ட பல வெள்ளையர்களை கொன்றும் குவித்தார்.

கமெண்டர் ஜெனரல் ஹெர்சே தலைமையில் ஆங்கிலேயர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு துப்பாக்கியை எடுத்து அனைவரும் தங்களது படைக்கு திரும்பி தங்களுக்கு இடப்பட்ட பணிகளை செய்யுமாறு தவறியவர்களை சுடப்போவதாக உத்தரவிட்டார். அதனை கேட்ட அனைவரும் பாண்டேவை தனியாக விட்டுவிட்டு சென்று விட்டனர்.

மாலையில் தனது பிரிவில் உள்ள பல சிப்பாய்கள் கிளர்ந்தெழுத்த நிலையில் உள்ளார்கள் என லெப்டினண்ட் போ (Baugh) என்பவன் அறிவித்தான். அத்துடன் அவர்களில் மங்கள் பாண்டே என்பவன் துப்பாக்கியுடன் மற்றைய சிப்பாய்களை கிளர்ச்சிக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்ததாகவும் முதலில் காணும் வெள்ளைக்காரரை சுட்டு விடுவதாகவும் பயமுறுத்திக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தான். போ உடனேயே தனது குதிரையில் ஏறி வாளையும் உருவிக்கொண்டு சிப்பாய்களை நோக்கிச் சென்றான். குதிரைச் சத்தத்தைக் கேட்ட பாண்டே அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுட்டார். எனினும் அது குறி தவறி குதிரையைத் தாக்கியது. போ பாண்டேயை நோக்கிச் சுட ஆரம்பித்தான். பாண்டே தனது வாளை உருவி போவைத் தாக்கிக் காயப்படுத்தினார்.

பாண்டேவின் கிளர்ச்சியை அறிந்த செர்ஜென்ட் மேஜர் ஜேம்ஸ் ஹுயுசன் அங்கு விரைந்தார். பாண்டேவை கைது செய்யுமாறு ஜெமேதார் ஈஸ்வரி பிரசாத் என்பவருக்கு உத்தரவிட்டார்.
கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மங்கள் பாண்டேவை தன்னால் தனியாக அடக்க முடியாது என ஈஸ்வரி பிரசாத் மறுத்துவிடவே, மங்கள் பாண்டேவின் கண்களில் படாமல், மறைவாக வந்த ஷேக் பால்ட்டு என்ற வேறொரு சிப்பாயால் பாண்டேயை மேலும் ஆங்கிலேயர்களை தாக்காதவாறு தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார்.

தன் கையில் இருந்த கத்தியால் பாண்டே தன்னை தாக்கி தற்கொலை செய்துக்கொள்ள முயன்றார். இறுதியில் அது உயிரை எடுக்காமல் பலத்த காயத்தோடு முடிந்தது. பாண்டே பின்னர் கைது செய்யப்பட்டு உடல் நிலை தேறிய பின், ஒரு வார விசாரணைக்கு பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையின் போது கலகத்தில் அவருடன் எத்தனை பேர் பங்கெடுத்தார்கள், எதாவது போதை மருந்து உட்கொண்டாரா என பல கேள்விகள் கேட்கப்பட்டன. கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் விடையாக தன்னோடு வந்த யாரையும் காட்டி குடுக்காமல், தான் சுயநினைவோடு தனியாக இதனை செய்ததாகவும் வேறு யாரும் இதில் பங்கேற்றவில்லை என உறுதியாக பதிலளிக்கவே ஏப்ரல் 8, 1857 இல் அவர் தூக்கிலிடப்பட்டார்.

மங்கள் பாண்டேவை கைது செய்யாமல், தப்பிக்க உதவி செய்ததாக கூறி ஈஸ்வரி பிரசாத்துக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொன்ன மூவரின் சாட்சியால் ஏப்ரல் 21ஆம் தேதி மரண தண்டனை வழங்கப்பட்டது.

மங்கள் பாண்டேவை காட்டி குடுத்த ஷேக் பால்ட்டு, அவரது தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஒரு மாதத்துக்கு பின் ஹவில்தாராக பதவி உயர்வு கிடைத்தும் பலனில்லாமல் உடனே அவன் படையினராலே கொல்லப்பட்டான்.

34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக மே 6 ஆம் நாள் கலைக்கப்பட்டது.

மங்கள் பாண்டேவுக்கு பின்பு வந்த பல சுதந்திர போராட்ட போராளிகளுக்கு அவரே ஒரு உந்துசக்தியாக இருந்தார் என்றால் மிகையல்ல. சுதந்திர போராட்ட தியாகி வீர் சர்வர்க்கர் நீருபூத்த நெருப்பாக இருந்த விடுதலை போராட்டத்தை முதலில் முன்னெடுத்தவர் மங்கள் பாண்டே என குறிப்பிட்டுள்ளார்.

பாரத அரசாங்கம் 1984 அக்டோபர் 5ஆம் தேதி சிறப்பு தபால் தலை வெளியிட்டு மங்கள் பாண்டேவை கௌரவித்தது. நம் சுதந்திர வேள்வித்தீயை தொடங்கிய வீரர்களை கௌரவிக்க பாரக்போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட இடம் அழகான நினைவுப்பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சுரேந்திர பானர்ஜி சாலையில் அமைந்துள்ள பாரக்போர் கன்டோன்மெண்ட்டில் நினைவுத்தூணும் அமைக்கப்பட்டுள்ளது.

பாரத சுதந்திர போராட்ட தியாக வரலாற்றில் மங்கள் பாண்டேவின் பங்களிப்பு மகத்தானது. 1857ல் சிறு பொறியாக நடைபெற்ற சிப்பாய் கலகத்தை பரவும் நெருப்பாக ஏற்றியவர். சரியாக சொன்னால் ஒரே ஒருவர் என்றும் சொல்லலாம்.

— திருமதி.சுபா பாலாஜி


Share it if you like it