மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள்

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள்

Share it if you like it

மருதிருவர்

உடலால் மருதிருவர்

உயிரால் அவரொருவர்

சின்னவர் சிந்திக்க

முன்னவரோ முனைப்போடு செயலாக்க!

விசுவாசத்தின் பொருளை அகராதியில் தேடினால் விண்ணதிர விஸ்வரூபமெடுத்து நிற்பர் வீரமும் விவேகமும் அத்தோடு ஈரமும் கொண்டே!

மண்ணைக்காத்திட மாறுபாடுகொள்ளாது மக்களைஇணைத்திட்ட முப்பாட்டன்கள் சிவசிந்தையொடு சிறியமருதும் வஜ்ர உடம்பும் வளரியொடு வர்மக்கலை பயின்ற பிரம்மாண்ட பெரியமருதும் தேசியம் தெய்வீகமென தெய்வீக வாழ்வுதனை வாழ்ந்திட்ட நமதிருவிழிகளன்றோ?

இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று, அது தெய்வீகங்காக்க மருதுகள் விட்ட கடைசிமூச்சு! ஆம், அவர்தம்கடைசிசுவாசம் கணபதிசுழியாய் காலத்திற்கும் காலபைரவராய் நம்மை காவல் காக்கும்! எம் பெரும்பாட்டன்களுக்கு கோடானகோடி வணக்கங்கள்.

சிவகங்கைச்சீமையின் வரலாற்றையும் இவ்விருவரையும் பிரிக்க முடியாது ராணி வேலுநாச்சியாரின் கணவரான மன்னர் முத்துவடுகநாதரிடம் நம்பிக்கைக்குரிய தளபதிகளாய் இருந்தனர் மருதிருவரும்.

ஆங்கிலேயனுக்கு வரிகட்ட மறுக்க போர் நடக்கிறது. போரை நிறுத்துவதாக நயவஞ்சகமாகக் கூறி மன்னரைக் கொலை செய்தனர் ஆங்கிலேயர். பின் 8 ஆண்டுகள் ராணியும், அவரது குழந்தையையும் திண்டுக்கல்லில் வைத்து பாதுகாத்து, படைதிரட்டி, பலரது ஆதரவையும் திரட்டி மீண்டும் ராணி வேலுநாச்சியாரை அரியணையில் அமர்த்துகின்றனர்.

இப்போராட்டத்தில் அவர்களது வீரம் மட்டுமல்ல விவேகமும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.வளரி என்ற பூமராங் போன்ற ஆயுதத்தை குதிரையில் செல்லும்போதே எறிந்து எதிரிலிருப்பவரைத் தாக்கி அது திரும்பி வரும்போது லாவகமாகப் பிடிக்கும் வல்லமை பெற்றிருந்தனர். வர்மக்கலை, கொரில்லா தாக்குதல், எதிரிகளை சப்தமிட்டு குழப்பமடையச் செய்தல் என பல போர்யுக்திகளைக் கையாண்டு ஆங்கிலேயரை அலற விட்டனர்.

நம்நாடு ஆன்மீக பூமியல்லவா!!… ஒருவரின் மாண்பும், மக்களிடத்திலே செல்வாக்கும், அவர்களது இறைபணியிலேயே வெளிப்பட்டிருக்கிறது நம் நாடடில். இவர்களின் ஆட்சி காலத்தில் தான் காளையார் கோவில் சீரமைக்கப்பட்டது. குன்றக்குடி முருகன் கோவில், ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புணரி சேவக பெருமாள் கோவிலையும் சீரமைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலுக்கும், காளையார் கோவில் அருகே இருக்கும் சருகனியிலும் தேர் வழங்கியுள்ளார்கள். இவர்களிருவரும் மக்களிடம் காட்டிய அளவு கடந்த அன்பும், நேர்த்தியான அரசியல் நகர்வுகளும் மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றுத்தந்தது. இதையெல்லாம் போறாமையுடன் குறித்துவைத்துக் கொண்டிருந்த வெள்ளையருக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. அது கட்டபொம்மன் அவர்களின் தம்பி ஊமைத்துரை அவர்களுக்கு மருதுபாண்டியர்கள் அடைக்கலம் கொடுத்தது.

இவர்களது அசாத்திய தைரியத்துக்கு எடுத்துக்காட்டு, திருச்சி மலைக்கோட்டையில் ஒட்டப்பட்ட வெள்ளையருக்கும், அவர்களுக்கு துணை செல்பவருக்கும் எச்சரிக்கை விடுத்து, சுதந்திரப்போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்த “ஜம்புத்தீவு பிரகடனம்”. இதன்‌ முடிவில் “இப்படிக்கு, மருது பாண்டியன்.  பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி” என்று அடையாளமிட்டு, ஆங்கிலேயனுக்கு சவால் விட்ட மாவீரர்கள் மருதுபாண்டியர்கள்.

இதன் பிறகு பல்வேறு தலைமறைவு வாழ்க்கையும், போராட்டகளங்களும், போர்களும் உச்சமடைந்த நிலையில் காளையார் கோவிலைத் தகர்க்க போவதாக அறிவித்த அறிவிப்பு இடிகேட் நாகம்போல அவர்களைச் செயலிழக்கச் செய்தது.

ஆம்…உயிரா!!!தெய்வமா!! என்றால் ஒரு நொடியும் தாமதியாமல் தெய்வமே என்று நம் மண்ணின் மாண்பை உலகுக்கு உரத்துச் சொன்னது இவர்கள் வரலாறு. இவர்கள் இருவரையும் சொல்லமுடியாத கொடுமைகள் செய்து, இவர்களை மட்டுமின்றி, இவர்களுக்கு ஆதரவு அளித்தோரும், அடைக்கலம் தந்தோரும், இவர்களது வம்சத்திலுள்ள அனைத்து ஆண் வாரிசுகளும், குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இரக்கமின்றி மக்கள் மன்றத்திலே தூக்கிலிடப்பட்டனர். பெரிய மருதுவின் மகன்‌துரைசாமியும் இன்னும் சிலரும் அடிமைகளாக பினாங்கு தீவிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இது மரணத்தினும் கொடிய தண்டனை.

அதன்பின் இரண்டு நாட்கள் அவர்களது உடல்கள் அங்கேயே தொங்கிக் கொண்டிருந்தது. ஆம்!!! இரு பெரும் சகாப்தங்கள் இப்போராடடம் இனி வருங்காலத்தின் கையில் என்ற பெருநம்பிக்கையோடு மூச்சை நிறுத்திக்கொண்டது தம் 53 வயதிலும், 47 வயதிலும்.

இன்றும் நம் தேசபக்திக்காக குரல் கொடுக்கும், நம் கோவில்களின் அவல நிலைக்காக வேதனைப்பட்டு, கோவில்களைச் சீரமைக்க நினைக்கும் ஒவ்வொரு உயிருக்கும் காவலாக சின்ன மருதுவும், பெரிய மருதுவும் மீசையை முறுக்கிக் கொண்டு துணையாய் உடன்வருகிறார்கள்.

வீறுகொள் தமிழினமே!!! தேசத்தையும், தெய்வீகத்தையும் காக்க.

– சுமதி மேகவர்ணம்


Share it if you like it