கட்சி நிர்வாகி மீது அமைச்சர் நாசர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மேற்கண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில், மரியாதை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும், பொதுக்கூட்டமும் திருவள்ளூரில் நாளை நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதற்காக, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை ஆய்வு செய்வதற்காக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சென்றிருந்தார். அப்போது, கட்சி நிர்வாகிகளிடம் சேர் எடுத்து வரும்படி அமைச்சர் கூறியிருக்கிறார். அதற்கு அமைச்சர் அமர்வதற்கு மட்டும் ஒரே ஒரு சேரை எடுத்து வந்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர், தகாத வார்த்தைகளால் கட்சி நிர்வாகிகளை திட்டியதோடு, கல்லைக் கொண்டும் எறிந்தார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் அமைச்சரின் அநாகரிகமான செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.