தி.மு.க.வை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்ததால், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அசிங்கப்படுத்தப்பட்ட விவகாரம், அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. தலைமையிலான தமிழக அமைச்சரவையில் நிதியமைச்சராக இருப்பவர் மதுரையைச் சேர்ந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இவர், மறைந்த முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகனாவார். அமெரிக்காவில் பொருளாதார ஆலோசகராக இருந்த இவருக்கு, தி.மு.க. சார்பில் சீட் வழங்கப்பட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று, அமைச்சராக இருக்கிறார். அதேசமயம், மதுரை தி.மு.க.வில் இரண்டு கோஷ்டிகள் இருக்கின்றன. ஒன்று மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. தளபதி தலைமையிலான கோஷ்டி. இன்னொன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோஷ்டி. தளபதிக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல் பழனிவேல் தியாகராஜனுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததால், ஆத்திரமடைந்த தளபதி தனி கோஷ்டியாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தவிர, பழனிவேல் தியாகராஜன், தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர் என்றும், தளபதி, முதல்வர் ஸ்டாலின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரை மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். ஆகவே, நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசும்போது தி.மு.க.வில் நடக்கும் கோஷ்டி மோதல் குறித்து வெளிப்படையாகவே பேசி வருகிறார். மேலும், ஹிந்து பண்டிகைகளுக்கு தி.மு.க. தலைவர்கள் பலரும் வாழ்த்துச் சொல்லாமல் இருந்து வரும் நிலையில், பழனிவேல் தியாகராஜன், தைரியமாக வாழ்த்துச் சொல்கிறார். அதேபோல, தி.மு.க.வில் நன்றாக இங்கிலீஷ் பேசத் தெரிந்த அமைச்சர் இவர்தான் என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பி.டி.ஆர்., நான் யாருக்கும் அடிமை இல்லை. எப்போது வேண்டுமானாலும் அரசியலை விட்டு போகத் தயார் என்று பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல, ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய பி.டி.ஆர்., தி.மு.க.வில் நடக்கும் வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு, தத்திகளை எல்லாம் வைத்து வாரிசு அரசியல் செய்தால் கட்சி காணாமல் போய்விடும் என்று கூறியதை, உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக தாக்கிப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், மதுரை தி.மு.க.வினர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமுள்ள தி.மு.க.வினர் பி.டி.ஆர். மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பி.டி.ஆரை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள் தி.மு.க.வினர். அதாவது, மதுரை தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா, உதயநிதி பிறந்தநாள் விழா, புத்தாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் பி.டி.ஆர். பேச எழுந்தபோது, அவருக்கு ஒரு நபர் சால்வை போர்த்தினார். இதை ஏற்றுக்கொண்டு பேசுவதற்காக புறப்பட்டபோது, மற்றொருவர் மாலை கொண்டு வந்தார். அந்த மாலை அமைச்சர் பி.டி.ஆருக்குத்தான் என்று கருதி, அவரை நிற்கச் சொன்னார் மேடையில் இருந்த நிர்வாகி ஒருவர். ஆனால், மாலையைக் கொண்டு வந்தவர்கள், அதை அமைச்சருக்கு அணிவிக்காமல் மதுரை மேயர் இந்திராணிக்கு அணிவித்து அமைச்சரை அசிங்கப்படுத்தி விட்டனர். இந்த அவமானத்தால், பி.டி.ஆரின் முகம் மாறிவிட்டது. பின்னர், மேடையில் பேசிய பி.டி.ஆர்., பதவி வரும் போகும். ஆனால், மனிதனின் அடையாளம் என்றும் மாறாது. அந்தவகையில், பி.டிஆர்.பழனிவேல் ராஜனின் மகன் என்பதுதான் எனது அடையாளம் என்று சூடாக பேசிவிட்டு அமர்ந்திருக்கிறார். இந்த சம்பவம் தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.