சிறுபான்மையினர் நலனும் பாதுகாப்பும் – பாரதம் – பாகிஸ்தான் ஒரு நடுநிலை பார்வை

சிறுபான்மையினர் நலனும் பாதுகாப்பும் – பாரதம் – பாகிஸ்தான் ஒரு நடுநிலை பார்வை

Share it if you like it

இந்துக்களோடு எங்களால் ஒன்றி வாழ முடியாது. எங்களுக்கென்று ஒரு தனி தேசம் வேண்டும். அதை எங்களின் மத அடிப்படையிலான இஸ்லாமிய தேசமாக வேண்டும் என்று கேட்டு வாங்கியவர்கள். அங்கிருந்த இஸ்லாமியர் அல்லாத மக்களை கொடூரமாக கொல்ல முடிந்தது . ஒரே ஒரு எச்சரிக்கையின் மூலம் அவர்களின் அசையும் அசையா சொத்துக்களையும் அவர்கள் வீட்டுப் பெண்களையும் அபகரித்துக் கொண்டு ஆண்களை மட்டும் உயிருடனோ பிணமாகவோ அப்புறப்படுத்த முடிந்தது. ஆனால் மதத்தின் பெயரால் துண்டாடிய தேசத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு போகவோ அவர்களின் மதங்களின் வழியில் வாழும் மக்களின் நலனை பாதுகாப்பை உறுதி செய்யவோ இன்று வரை இயலவில்லை. பல லட்சம் இஸ்லாமியர் அல்லாத மக்களின் உதிரத்தில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தான் என்ற தேசம் பெண்கள் குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி கொடூரமாக கொல்லப்பட்ட மரண ஓலத்தில் அரங்கேறிய அரியணை இன்று அதற்கான விலையை தரத் தொடங்கி இருக்கிறது.

சுதந்திர பாரதத்தில் இன்றளவும் சிறுபான்மை மக்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய எத்தனையோ சிறப்பு சட்டங்கள் இருக்கிறது . அவர்களின் நலன் பாதுகாப்பு சமூக அந்தஸ்தை பாதுகாப்பதற்கு என்று எத்தனையோ ஆணையங்கள் தீர்ப்பாயங்கள் இருக்கிறது . ஆனால் இந்த மண்ணின் பெரும்பான்மை மக்களுக்கு என்று எந்த ஒரு விசேஷித்த அமைப்போ ஆணையமோ இன்று வரை கிடையாது. அவர்களுக்கென்று இருக்கும் சட்டம் பொதுவான நீதித்துறை அரசு எந்திரம் என்ற ஒரு பொது பாதையில் தான் இன்று வரை பாரதத்தின் பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு ஒரு சிறுபான்மை மதத்தின் நம்பிக்கை வாழ்வியல் அவர்களின் ஆன்மீகம் பற்றி எவர் ஒருவரும் குறைத்து மதிப்பிட்டோ தவறுதலாகவோ ஒரு விமர்சனத்தை வைத்து விட்டு எளிதில் தப்ப முடியாது. அதிலும் அவர் மாற்று மதம் சார்ந்தவராக இருக்கும் பட்சத்தில் பிரச்சனை நாடு முழுவதும் எதிரொலிக்கும்.

ஆனால் இதே பாரதத்தில் இந்த மண்ணின் பெரும்பான்மை மக்களின் வாழ்வியலை நம்பிக்கையை அவர்களின் ஆன்மீக பண்பாடு கலாச்சார பொக்கிஷங்களை கூட அதன் வழியில் பிறந்து வளர்ந்தவர்கள் முதல் மாற்று மதம் சார்ந்தவர்கள் வரை எவரும் அவமதிக்க முடியும். கட்சி அரசியல் என்ற பெயரிலும் முற்போக்கு வாதம் சீர்திருத்தம் என்ற பெயரிலும் எவர் வேண்டுமானாலும் எள்ளி நகையாட முடியும். புராணங்கள் இதிகாசங்களை இழிவு படுத்தி பொதுமேடையில் கூட பேச முடியும். இந்துஸ்தானத்தின் மண்ணின் மரபு வழி வாழ்ந்து அந்த மண்ணின் மரபு வழிகளை அடுத்த சந்ததிக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முழு முயற்சியில் இருப்பவர்களை தேடி தேடி கொடூரமாக வெட்டிக் கொல்லக்கூட முடியும். பாரதத்தின் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் மீது கொலை தாக்குதல் நடத்த முடியும். பிரதமர் குடியரசு தலைவர் வரை கொலை மிரட்டல் அச்சுறுத்தல் செய்ய முடியும். இததனையும் செய்துவிட்டு சிறுபான்மையினர் என்ற போர்வையில் சட்டத்தின் வழியில் பாதுகாப்பையும் தேடிக் கொள்ள முடியும். வன்மமான கருத்துக்களை கூட பொது மேடையில் உதிர்த்துவிட்டு ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவர்களை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். ஆனால் இன்னுமும் ஒரு சாரார் பேசுகிறார்கள் பாரதத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை. சிறுபான்மையினர் வாழ்வதற்கு பாரதம் உகந்த தேசம் இல்லை என்று. அவர்களுக்கு சில கேள்விகள்.

சுதந்திரம் அடைந்த நாளில் பாரதத்தில் இருந்த சிறுபான்மையினர் பொது சதவீதம் என்ன? இன்றைய நாளில் அவர்களின் சதவீதம் என்ன? அன்றைய நாளில் தனி நபர் வருமானம் கல்வி பொருளாதார அரசியல் வளர்ச்சி அடிப்படை என்ன இன்றைய நாளில் அடிப்படை வளர்ச்சி என்ன என்ற புள்ளி விவரங்களை ஒரு பக்கம் அவர்கள் எடுத்து வைக்கட்டும். மறுபுறம் அவர்களே இதே பாரதத்தில் சுதந்திர இந்தியாவின் அன்றைய நாளில் இந்த மண்ணின் பெரும்பான்மை சார்ந்த மக்களின் பொது சதவீதம் என்ன அவர்களின் கல்வி சமூக அரசியல் பங்களிப்பு என்ன அதன் சார்பிலான அதிகாரங்கள் மற்றும் தனிநபர் வருமானம் என்ன என்பதைப் பற்றிய தரவுகளையும் எடுத்து வைக்கட்டும். இரண்டிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களின் மூலம் அவர்கள் சொல்லும் சிறுபான்மை நலன் பாதுகாப்பு என்பதன் அர்த்தத்தை அவர்களே புரிந்து கொள்ளட்டும்.

சுதந்திர பாரதத்தில் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் என்ற ஒரு இஸ்லாமியர் இந்திய பாடத்திட்டங்களை நிர்ணயிக்கும் கல்வியாளர் பிரிவில் உயர்ந்த அதிகாரத்திற்கு வர முடிந்தது. இன்றளவும் பாகிஸ்தானில் ஒரு இந்து ஒரு சீக்கியன் கிறிஸ்தவன் அரசுப் பணியில் ஆசிரியர் பணிக்கு வர முடியுமா? என்று கேளுங்கள். 100 கோடி இந்திய மக்களை வழி நடத்தும் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் தலைமை பொறுப்பில் இங்கு முகம்மது அசாருதீன் என்ற ஒரு இஸ்லாமியர் இருந்திருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பெரும் பிரயத்தனம் செய்து இடம் பெற்று கூட நான் ஒரு இந்து என்பதால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டேன். அவமதிக்கப்பட்டேன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று வெளிப்படையாக ஒரு இந்து பாகிஸ்தானில் வேதனை தெரிவிக்கிறார்.

இஸ்லாமிய சமூகம் சார்ந்த இறுதிவரை இஸ்லாமிய அடையாளங்களோடு வாழ்ந்த அப்துல் கலாம் என்பவர் இஸ்ரோவின் சாதாரண விஞ்ஞானியாக தனது பணியை தொடங்கி தலைமை அணு விஞ்ஞானியாக வளர முடிந்தது. இந்த தேசத்தின் குடியரசு தலைவராக பாரதத்தின் அணு சார்ந்த அறிவியலின் முகமாக உலகெங்கும் போய் சேர முடிந்தது . ஆனால் பாகிஸ்தானில் ஒரு இந்து ஒரு மருத்துவக் கல்வியில் பொறியியல் சட்ட கல்லூரியில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்று விட்டால் அந்த மாணவனின் கதி என்ன ஆகும்? . அவரின் குடும்பத்தின் கதி என்ன ஆகும்? என்பதை அவர்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பதில் தரட்டும்.

130 கோடி இந்தியர்களின் பெருமிதமாக உலகெங்கும் மெச்சப்படும் சந்திராயன் மூன்று வெற்றிக்கு காரணமான இந்திய இஸ்ரோவின் டி ஆர் டி ஓ என்னும் அமைப்பின் உயரிய பதவி டெய்ஸி தாமஸ் என்ற ஒரு கிறிஸ்தவ பெண்மணியால் எட்ட முடியும். அவர் எந்த மதம் சார்ந்தவர் என்ற கேள்விக்கு இங்கு இடம் இல்லை. அவரின் கல்வி தகுதி திறமை உழைப்பு முயற்சி அர்ப்பணிப்பு மட்டுமே இங்கு கருத்தில் கொள்ளப்படும். அந்த வகையில் இன்று அவர் டி ஆர் டி ஓ வின் தலைமை பொறுப்பில் இருக்கிறார் . நாளை அவர் இதனினும் மேலான உயர்ந்த பதவிக்கு கூட நிச்சயம் போக முடியும். ஆனால் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு இந்து உயர் கல்விக்கு உயிர் பயமின்றி விண்ணப்பிக்க முடியுமா ? என்ற கேள்விக்கு பதில் வேண்டும்.

இதோ சிறுபான்மை சமூகம் சார்ந்த தென்கோடியில் இருக்கும் ஷாஜி நிஹார் என்னும் ஒரு பெண் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலத்தின் திட்ட பணியில் தலைமை பொறுப்பில் இருந்திருக்கிறார். இன்று வெற்றிகரமான ஆதித்யா எல் ஒன் பங்களிப்பில் அவரின் வெற்றியும் உழைப்பும் தேசம் கொண்டாடுகிறது. இங்கு அவர் இஸ்லாமியர் என்று யாரும் பார்க்கவில்லை. இங்குள்ளவர்களின் பார்வையில் அவர் ஒரு இந்திய பெண்மணி. அவரின் கல்வி தகுதி திறமை உழைப்பு யாவும் இந்த தேசத்தின் நலனுக்காகவும் வெற்றிக்காகவும் அவர் அர்ப்பணித்திருக்கிறார். அந்த வகையில் அவர் எங்களின் சொந்த சகோதரி .சக தேசியவாதி .சக இந்திய குடிமகள் . அந்த வகையில் அவரின் வெற்றிக்கு உழைப்பிற்கு தேசம் தலைவணங்குகிறது. இன்றைய அவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும் இதே வழியில் இன்னும் பயணித்து மேலும் பல வெற்றிகளை சாதனைகளை அவரும் அடைய வேண்டும். தேசத்திற்கும் பெற்றுத்தர வேண்டும் என்பதை இங்கு உள்ள அனைவரின் எதிர்பார்ப்பு.

பாரதத்தில் சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விஷம பிரச்சாரம் செய்யும்இந்த நரித்தனத்தை இன்னும் சிறுபான்மை சமூகம் சார்ந்த பலரும் உணராமல் அவர்களின் விஷம பிரச்சாரத்தில் மதி மயங்கி இந்த தேசத்திற்கு எதிராகவும் இந்த தர்மத்திற்கு எதிராகவும் பேசுவதும் கருத்து தெரிவிப்பதும் இங்குள்ள பெரும்பான்மை மக்களை பதை பதைக்க செய்கிறது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை அவர்களின் தர்மத்தைப் பழித்து பேசினாலே போதும் .சிறுபான்மை மக்களின் வாக்குகளை நாம் மொத்தமாக கவர முடியும் என்ற அளவில் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் நினைக்கும் அளவிற்கு துணிச்சலையும் தைரியத்தையும் நம்பிக்கையும் கொடுத்தது யார் ? என்ற கேள்வி வரும்போது சிறுபான்மை மக்களிடம் இருக்கும் இணக்கம் மனதளவில் உடைகிறது. இதற்கு காரணம் யார்? இதற்கு தீர்வு என்ன ? என்பதை இங்கு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை மோடியின் அரசியல் சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று விஷமப் பிரச்சாரம் செய்யும் விஷமிகளின் மனசாட்சிக்கு விட்டு விடுவோம்.


Share it if you like it