தமிழகத்தில் உள்ள இருளர் சமுதாயத்தை சேர்ந்த இருவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க உத்தரவிட்ட பாரத பிரதமர் மோடிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாரதப் பிரதமர் மோடி தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் மாறா அன்பும் பாசமும் கொண்டவர். தமிழ் மொழி மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்று சொல்லலாம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அண்டை நாட்டில் தொடங்கி அயல்நாடு வரை தமிழ் மொழியின் மேன்மைகள் குறித்து பேசுவதையே எண்ணமாக கொண்டவர். அந்த வகையில், மனதின் குரல் (மன்கீ பாத்) எனும் நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்நிகழ்ச்சியில், தேசத்திற்கும், சமூகத்திற்கும் தங்களால் இயன்ற சேவைகளை செய்து வரும் தமிழர்களை அடையாளம் கண்டு உலகம் அறிய செய்து வருகிறார்.
இதுதவிர, தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, தொன்மை, உள்ளிட்டவற்றை மன்கீ பாத் நிகழ்ச்சியில் அவ்வபோது குறிப்பிட்டு வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் அந்தமான், நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது வென்றவர்களின் பெயரை பிரதமர் மோடி சூட்டினார். இதில், தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, மகாகவி பாரதியார் பிறந்த நாளான டிசம்பர் 11 – ஆம் தேதியை, ’இந்திய மொழி தினமாக’ கடைப்பிடிக்க வேண்டும் என UGC பல்கலைக்கழகத்திற்கு மோடி அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்திருந்தது. இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு மத்திய அரசு ’பத்மஸ்ரீ விருது’ வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இருளர் சமுதாயத்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாம்பு பிடி நிபுணர்கள் திரு.மாசி சடையன் மற்றும் திரு. வடிவேல் கோபால் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு பா.ஜ.க. சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.