மக்களவை 2 ஆம் கட்ட தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்க பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் காலை தொடங்கி பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.
முன்னதாக, இன்று அதிகாலை பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இன்று தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுகிறேன். வாக்குப்பதிவு அதிகமானால் அது நம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். இளம் வாக்காளர்கள், பெண்கள் பெருமளவில் முன்வந்து வாக்களிக்க வேண்டுகிறேன். உங்கள் வாக்கு; உங்கள் குரல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
2-ம் கட்டமாக கேரளா – 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா 8, மத்திய பிரதேசம் – 6,பிஹார், அசாம் – தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் – தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தனது வீட்டிலிருந்து நடந்தே வந்து வாக்களித்துச் சென்றார். கேரள எதிர்க்கட்சித் தலைவர் விடி சுதீஷன் எர்ணாகுளத்தில் வாக்களித்தார்.கர்நாடகா மாநிலத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கை பதிவு செய்தார். இன்போசிஸ் நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தி அவரது மனைவியும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுதா மூர்த்தியும் பெங்களூருவில் வாக்களித்தனர்.