மரணத்தை வென்ற ம. பொ. சிவஞானம் | MPSivagnanam | Freedom75 | சுதந்திரம்75

மரணத்தை வென்ற ம. பொ. சிவஞானம் | MPSivagnanam | Freedom75 | சுதந்திரம்75

Share it if you like it

ம.பொ.சிவஞானம்

(மது ஒழிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர், நூல்கள் பல எழுதியவர், சிலம்புச் செல்வர் என்ற பட்டம் பெற்றவர்)

சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில், 1906 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி, பிறந்தார். தந்தை பொன்னுசாமி, தாயார் சிவகாமி அம்மையார். அவரது பெற்றோரின் பத்து குழந்தைகளுள், உயிரோடு இருந்த மூவரில், இவர் மூத்தவர். முதலில், தாயார் மூலமே கல்வி கற்றார், ம.பொ.சி. மிகவும் வறுமையான சூழலில் பிறந்ததால், 3 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொண்டு, நெசவுத் தொழிலில் கூலியாளாக வேலை செய்தார்.  பின்னர், அச்சுக் கோர்க்கும் பணியில், நீண்ட வருடங்கள் பணி புரிந்தார். ‘மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்’ என்பதே பின்னாளில் ‘ம. பொ. சி.’ என ஆயிற்று.

அச்சு  கோர்க்கும் தொழிலில் இருந்ததால், மகாத்மா காந்தி போன்ற‌ பல சுதந்திர போராட்ட வீரர்களின் சரிதங்களை படிக்க உதவியாய் இருந்தது. குறிப்பாக சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படித்து, புலமை பெற்றதனால், “சிலம்புச் செல்வர்” என்ற பட்டமும் கிடைத்தது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் சரிதத்தை, ஆராய்ந்து எழுதினார். அந்த புத்தகம், இவரின் எழுத்துத் திறனை வெளிப் படுத்தியது. “வள்ளலாரும் ஒருமைப்பாடும்” என்ற இவரது நூல், சாகித்திய அகாடெமி விருதைப் பெற்றது. ரூபாய் ஐயாயிரம் பரிசாகப் பெற்றார். “எனது போராட்டம்” என்ற பெயரில், தனது வரலாற்றை, ஆயிரம் பக்கம் கொண்ட புத்தகமாக வெளியிட்டார். அது, தமிழக அரசின் பரிசாக, 1981 ஆம் ஆண்டு, ரூபாய் 2000 பரிசாகப் பெற்றது. ‘சுதந்திர போராட்டத்தில் தமிழக வரலாறு’ என்ற புத்தகத்திற்காக, ரூபாய் ஒரு லட்சம் பரிசாக, 1982 ஆம் ஆண்டு பெற்றார்.

31 ஆம் வயதில், திருமணம் ஆனது. காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை வாசம் சென்ற ம.பொ.சி,  அந்தக் காலத்தில் காங்கிரஸின் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். போராட்டங்களின் விளைவாக,  தன் ஆயுட் காலத்தில், எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் கழித்தவர், ம.பொ.சி.

1927 ஆம் ஆண்டு, காங்கிரசில் தன்னை இணைத்துக்  கொண்டார். 1928ல், சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார். முதன் முதலாக, 1930ல் மெட்ராஸ் கடற்கரையில், ‘பிரம்படி படுதல்’ (லத்தி சார்ஜ்) மற்றும் ‘சிறை செல்லும் படலம்’ தொடங்கியது, உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்ற போது தான்.

1932ல், காந்திஜி லண்டனிலிருந்து திரும்பிய போது, ஜனவரி 4 ஆம் தேதி, கைது செய்யப் பட்டதை அறிந்த ம.பொ.சி அவர்களின் தேசிய உணர்வு, உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்தது.

அப்போதிலிருந்து, காங்கிரஸில் ஈடுபாடு அதிகரித்து, மேடைப் பேச்சுக்களில் பங்கேற்றார். பின்னர், தொழிற் சங்கங்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. வி.வி. கிரி போன்றவர்களின் தொடர்பும் ஏற்பட்டது. பலமுறை சிறைக்குச் சென்றார். 1943ல் அமராவதி சிறையில் இருந்த போது, உடல் நலம் மிகவும் பாதிக்கப் பட்டு, தெய்வாதீனமாக மரணத்திலிருந்து தப்பினார். சிறையிலிருந்த போது, அவரது மனைவியின் உடல் நலம் மிகவும் மோசமாகி, மரணப் படுக்கையில் இருக்கிறார் எனக் கேள்விப் பட்ட போது, இறை நம்பிக்கையே அவருக்கு மன உறுதியைத் தந்தது. சங்க இலக்கியங்களின் பால், ம.பொ.சி அவர்களுக்கு ஈடுபாடு ஏற்பட, சுப்பிரமணிய பாரதியின் எளிமையான  எழுத்து உதவியது எனக் கூறுவர். இலக்கியத்தில் தனது வளர்ச்சிக்கு, பாரதியின் எழுத்துக்களே உதவின என்பதை ம.பொ.சி அவர்கள் தவறாமல் குறிப்பிட்டார்.

பாரதியார் பற்றி பத்து ஆராய்ச்சி நூல்கள் எழுதினார். அவரது தமிழ் மீதான பற்று வளர்ந்து, சிலப்பதிகாரத்தை ஆராய்வது தொடர்ந்தது. அவரின் தமிழ் ஈடுபாட்டால், கல்வியில் தமிழ் பயிற்று மொழியாக அனைத்துக் கட்டங்களிலும் இருக்க வேண்டும் என்ற தணியாத வேட்கை உண்டானது. பொது வாழ்வில் அரசியல் மற்றும் இலக்கியத்தில், அவரது பணி தொடர்ந்தது. ம.பொ.சி. அவர்கள் இலக்கியம் மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் சிறியதும், பெரியதுமாக கிட்டத்தட்ட 120 எழுதி உள்ளார். 

அமராவதி சிறையில் இருந்த போது, வயிற்றுப் புண் ஏற்பட்டது. அது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. இருப்பினும் அந்த உபாதை, தனது அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளில் இடையூறாக இருக்க, அவர் அனுமதிக்கவில்லை. பொருளாதரத்தில் குறைவாக இருந்த போதிலும், தனது இலக்கிய ஆர்வத்தில், இடையூறாக கருதவில்லை. அவருக்கு அங்கீகாரம், அவர் தேடாமலே அவரது ஈடுபாட்டான பணிகளால் அவரை அடைந்தது.

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்ட போது திருத்தணியும், திருப்பதியும் ஆந்திரா வசம் செல்ல இருந்ததை, தனது போராட்டம் மூலம் திருத்தணியை தமிழ்நாட்டோடு இணைத்தார். குமரி மாவட்டமும், செங்கோட்டையும் தமிழகத்தோடு இணைக்கப் பட்டன. தேவிகுளம், பீர்மேடு ஆகியவை கேரளத்துடன் இணைக்கப் பட்டன. தமிழகத்தோடு பல இடங்கள் இணைக்கப் பட, இவரது போராட்டம், மிக முக்கியக் காரணியாக இருந்தது.

1950 ல், சென்னை, ராயப்பேட்டை காங்கிரஸ் திடலில், முதன் முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. இதற்கு பெரும் பங்காற்றியவர், ம.பொ.சி.

ரா.பி.சேதுப் பிள்ளை, டாக்டர் மு. வரதராசனார், காமராஜர் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களையும் அழைத்து, விழாவை நடத்தினார். அனைத்துக் கட்சி பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துக் கொண்ட  தமிழ் கலாச்சார விழாவாக, அது நடந்தேறியது. தனது ‘தமிழரசு கழகம்’ மூலம், சிலப்பதிகார விழாவை தொடர்ந்து நடத்தினார். ம.பொ.சி.யின் தமிழ்க் கொடையைப் பாராட்டி,  பேராசிரியர் ரா. பி. சேதுப் பிள்ளை, அவருக்கு ‘சிலம்பு செல்வர்’ என்னும் பட்டத்தை வழங்கினார்.

தி.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார். மிகச் சிறந்த தேசியவாதியாக, பேச்சாளராக, இலக்கியவாதியாக திகழ்ந்த ம.பொ.சி. அவர்களுக்கு, அவரது பல்வேறு சேவைகளை கருத்தில் கொண்டு, 1972 ஆம் வருடம் மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ பட்டம் அளித்து, கௌரவப் படுத்தியது.

தன் இறுதி மூச்சு வரை, தமிழ்த் தொண்டு புரிந்த ம.பொ.சி., 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி, உடல்நலம் குன்றி, தனது 89 வயதில் காலமானார்.

  • அருள் சிவசங்கரன்

Share it if you like it