நேற்று கேரளாவின் மலப்புரத்தில் நஸ்ரின் என்கிற 2 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இறந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், இறப்பதற்கு முன், அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், தலையில் ரத்தம் உறைந்து, பின்னர் அவர் இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தந்தை ஃபைஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் கலிகாவா பகுதியைச் சேர்ந்த முகமது ஃபைஸ் என்பவர், தனது மகள் நஸ்ரினை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24, 2024) மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஃபைஸ் மருத்துவர்களிடம், தனது மகள் ஏதோ சாப்பிட்டுவிட்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து சிகிச்சை பலனின்றி நஸ்ரின் உயிரிழந்தார். பின்னர், இறந்த குழந்தையின் பிரேதப் பரிசோதனை செய்தபோது, சிறுமியின் முகம் மற்றும் மார்பில் ஆழமான காயங்கள் இருப்பது தெரிய வந்தது. தலையிலும் ஆழமான காயம் இருந்தது.
நஸ்ரின் கைகளில் இரத்தக் காயங்கள் இருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தந்தை முகமது ஃபைஸ் அவர் இறந்த பிறகு தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மரணம் குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்தனர், முகமது ஃபைஸ்ஸை புல்லங்கோடு பகுதியில் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.