மீண்டும் மும்பை தாக்குதல்? வாட்ஸ் ஆப் பரபரப்பு!

மீண்டும் மும்பை தாக்குதல்? வாட்ஸ் ஆப் பரபரப்பு!

Share it if you like it

6 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் என்று மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வந்த குறுந்தகவலல் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவி, மும்பையில் இத்தாக்குதலை நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், போலீஸாரும் கொல்லப்பட்டனர். இவர்களில் வெளிநாட்டினரும் அடக்கம். மேலும், 700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதன் காரணமாக, இந்தியாவுக்கு யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று வெளிநாடுகள் பலவும், தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தி இருந்தது. இதன் காரணமாக, இச்சம்பவத்திற்குப் பிறகு சுமார் 2 ஆண்டு காலத்துக்கும் மேலாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பைக்கு 190 கி.மீ. தொலைவில் உள்ள ராய்க்கட் பகுதியில் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. இந்த படகை ஆய்வு செய்ததில் ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் மூன்றும், தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. குறிப்பாக, ராய்க்கட் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து, மர்ம படகு கைபற்றப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்தப் படகு ஆஸ்திரேலியா நாட்டில் தயாரிக்கப்பட்டு, ஓமன் நாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், அப்படகு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமானது என்பதும், கடந்த ஜூன் மாதம் விபத்தில் சிக்கயதால் நடுக்கடலில் கைவிடப்பட்டது என்பதும் தெரியவந்தது. மேலும், மேற்படி துப்பாக்கிகள் தங்களது பாதுகாப்புக்காக வைத்திருந்தது என்பதும் தெரியவந்தது. இதனால், போலீஸார் நிம்மதியடைந்த நிலையில்தான், மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. அதில், 6 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல், இந்தியாவில் தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மும்பை தீவிரவாத தடுப்புக் குழு மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Share it if you like it