தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு முருகன் ஆலயங்களை நோக்கி பக்தர்கள் குவிந்து வரும் புனித நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
உலக தமிழர்களின் ஒப்பற்ற தெய்வமாக இருக்க கூடியவர் முருக பெருமான். இவரது, பெருமைகளை நமது முன்னோர்களும், மூத்தவர்களும் நமக்கு உரைத்துள்ளனர். அந்த வகையில், அகத்தியர், நக்கீரர், பாம்பன் சுவாமிகள் மற்றும் திருமுருக கிருபானந்த வாரியார் உள்ளிட்டவர்கள் முருகனின் மேன்மைகளை நமக்கு உரைத்துள்ளனர்.
அப்படிப்பட்ட முருகனைக் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானவை வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி விரதம், பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் இருந்து வருகிறது. இவற்றில், தைமாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் உயர்வானதாக பார்க்கப்படுகிறது. இந்த நன்னாளில் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்கள் விழா கோலம் பூண்டு இருக்கும். அந்த வகையில், ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து முருகனை தரிசிக்க ஆலயங்களுக்கு செல்வர். அந்த வகையில், இன்று பிப் – 5ம் தேதி தைப்பூசம் விழா வருகிறது.
இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த வாரம் அனைத்து முருகன் ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை, முன்னிட்டு முருக பெருமானின் அருள் வேண்டி ஆறுபடை வீடுகளுக்கும் முருக பக்தர்கள் செல்வதை இன்று நாம் காண முடியும். அந்தவகையில், சண்முக கவசம், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், பஞ்சாமிர்த வண்ணம் மற்றும் முருகன் மந்திரங்கள் போன்றவற்றை தொடர்ந்து உச்சரித்து முருக பெருமானை இன்று நாம் வழிபடுவது நமக்கு நன்மை பயக்கும்.
அன்னை பார்வதி தேவியிடம் முருக பெருமான் ஞானவேல் பெற்ற தினமாகவும் இந்த புனித நாள் பார்க்கப்படுகிறது. தைப்பூச நாளில் காவடி எடுப்பவர்களுக்கு எந்த விதமான பில்லி, சூனியம் போன்ற ஏவல்களும் அண்டாது என்பது ஹிந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த பூச நட்சத்திரத்தில் விரதம் இருப்பது அனைவருக்கும் நன்மை கிட்டும் என்பது நமது முன்னோர்களின் வாக்கு என்பது குறிப்பிடத்தக்கது.