இந்தியப் பெருமையை உலகிற்கு உணர்த்திய இசைஞானி

இந்தியப் பெருமையை உலகிற்கு உணர்த்திய இசைஞானி

Share it if you like it

இந்தியப் பெருமையை உலகிற்கு உணர்த்திய இசைஞானி

சினிமா என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் இரண்டறக் கலந்தது. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், சினிமாவின் தாக்கம், ஆரம்பக் காலங்களில் இருந்தே, மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. கலைத் துறையில் நுழைந்து, அதில் ஜொலித்து, அதன் பின்னர் அரசியலில் நுழைந்து, மிகப் பெரிய பதவியைப் பெற்ற பலரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே.

எனவே தான், தமிழ் சினிமாவில் இருந்து வரும் குரல்கள், நமது சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது போன்றதொரு நிலை, இன்றோ அல்லது நேற்றோ தொடங்கவில்லை, பல வருடங்களாகவே, தொடர்ந்து இருந்து வருகின்றது.

பெரியார் படத்திற்கு இசை அமைக்க மறுத்த இளையராஜா :

பெரியார் படத்திற்கு இசை அமைக்க, அந்த படத்தின் இயக்குனர் ஞான ராஜசேகரன் அவர்கள், இசை ஞானியை அணுகினார். ஆனால் அவரோ, அந்தப் படத்திற்கு இசை அமைக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், “இறைவன் மீது நம்பிக்கை கொண்ட நான், இறை நம்பிக்கை இல்லாத பெரியார் படத்துக்கு இசை அமைப்பது சரியாக இருக்காது எனவும், தான் செய்யும் பணிக்கு, அது முறையாக இருக்காது” எனவும் தெரிவித்தார்.

பாரதப் பிரதமரை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா :

“ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேசன்” (BlueKraft Digital Foundation) என்ற நிறுவனம் “மோடியும் அம்பேத்கரும்” என்ற தலைப்பில், ஓர் ஆங்கில புத்தகத்தை வெளியிட்டது. அதில் இசை ஞானி அவர்கள், முன்னுரை எழுதி இருந்தார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்களை, எதிர் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அவர் தெரிவித்த கருத்து, “பிரதமர் மோடி தலைமையில், நமது நாடு, நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. எல்லா துறைகளிலும், முன்னேறி வருகின்றது. சமூக நீதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை, பிரதமர் மோடி அவர்கள் எடுத்து வருகின்றார். இஸ்லாமியர்களின் வாழ்வில், முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாக, இஸ்லாமிய பெண்களுக்கு, பெரும் மாற்றத்தை பிரதமர் மோடி அவர்கள் செய்து இருக்கின்றார். அம்பேத்கருக்கும் – மோடிக்கும் நிறைய விஷயங்களில் தொடர்பு இருக்கின்றது. அவர்கள் இருவருமே வறுமையில் தவித்தவர்கள், இந்தியா வளர்ந்து உயர வேண்டும் என மிகப் பெரிய கனவு கண்டவர்கள்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தக் கருத்தை ஆதரித்து ஒரு தரப்பினர் பேசினாலும், அதனை எதிர்த்து மற்றொரு தரப்பினர் பேசியும், திரும்பப் பெறக் கோரியும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இசை ஞானி அவர்கள், தான் தெரிவித்த கருத்தை, எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டேன் என்றும், அந்த கருத்தில், தான் உறுதியாக உள்ளேன் எனவும் கூறியது, அவரது மன உறுதியை அனைவருக்கும் காட்டியது.

இசை ஞானியின் அரும் பெரும் சாதனைகள் :

1976 ஆம் ஆண்டில், “அன்னக்கிளி” என்ற திரைப் படத்தின் மூலமாக, திரைத் துறைக்குள் நுழைந்த இசைஞானி அவர்கள், அதன் பின்னர், நிறைய சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

1986 ஆம் ஆண்டிலேயே, “விக்ரம்” என்னும் கமல்ஹாசன் நடித்த திரைப்படத்தில், கணினி மூலமாக இசை அமைப்பை மேற்கொண்டார். அகில இந்திய அளவில், முதன் முதலில் அவ்வாறு செய்தவர், நமது இசைஞானி.

கர்நாடக சங்கீதமான “மோகனம்” ராகத்தில் இசை அமைத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை…”, “ரீதிகௌளை” ராகத்தில் அவர் இசை அமைத்த “சின்னக் கண்ணன் அழைக்கிறான்…” போன்ற பல பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.

மேற்கத்திய ராகத்தில் அவர் இசை அமைத்த, “பொன் மாலை பொழுது…”, “என் இனிய பொன் நிலாவே…” போன்ற பல பாடல்கள் அனைத்துத் தரப்பினரையும் முணுமுணுக்க வைத்தது.

1976 முதல் தொடர்ச்சியாக பதினைந்து வருடங்களுக்கு, சராசரியாக ஒரு நாளைக்கு, மூன்று பாடல்களை புதியதாக இசை அமைத்த இசை பிரம்மாவாக அறியப் பட்டார், இசைஞானி. லண்டனில் முழு “சிம்பொனி” இசையையும் இசை அமைத்த, “முதல் ஆசியர்” என்ற பெருமையை பெற்றவர்.

“பஞ்சமுகி” என்ற புதியதொரு ராகத்தை உருவாக்கினார். லண்டனில் உள்ள ட்ரினிட்டி இசைக் கல்லூரியில், கிட்டாரில் தங்கப் பதக்கத்தை பெற்றவர்.

பி.பி.சி. என்ற நிறுவனம்,  நடத்திய வாக்கெடுப்பில், 155 நாடுகளில் இருந்து கலந்துக் கொண்ட நேயர்கள், உலகின் தலைசிறந்த பாடலாக, நான்காவது இடத்தில் “தளபதி” படத்தில் இடம் பெற்ற “ராக்கம்மா கையத்தட்டு…” என்ற பாடலை தேர்ந்து எடுத்தார்கள்.

ஐந்து முறை தேசிய விருதும், உயர்ந்த விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” விருது, 2012 ஆம் ஆண்டில் “சங்கீத நாடக அகாடமி விருது” என பல மாநில விருதுகள், தேசிய விருதுகள், உலகின் பல உயர்ந்த விருதுகளைப் பெற்றார்.

2013 ஆம் ஆண்டில், சி.என்.என். – ஐ.பி.என். (CNN – IBN) என்ற செய்தி நிறுவனம், இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளருக்கான வாக்கெடுப்பை நடத்தியது. அதில், 100 ஆண்டு கால இந்தியத் திரைத் துறையின் சிறந்த இசை அமைப்பாளராக,  இசைஞானி தேர்ந்து எடுக்கப் பட்டார்.

ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து, பின்னணி இசை அமைப்பதில் வல்லவர் என பெயர் பெற்றதுடன், கலைத் துறையிலும், “திருவாசகம்” போன்ற தெய்வீக மார்க்கத்திலும், தன்னுடைய முத்திரையை பதித்ததாலே தான், “இசை ஞானி” என அனைவராலும் அன்புடன் அழைக்கப் படுகிறார், இளையராஜா அவர்கள்.

ஒரு பாடலுக்கு இசை அமைத்த பின்னர், அது அனைவருக்கும் பிடிக்குமா? அல்லது அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? என யோசித்த பிறகே, அந்தப் பாடல் வெளியிடப் படும். ஒரு பாடலுக்கே, பலமுறை யோசிக்கும் இசை ஞானி அவர்கள், ஒரு கருத்தை முன் வைக்கும் முன்னர், எந்த அளவிற்கு யோசித்து இருப்பார். எல்லா வகையிலும் அலசி ஆராய்ந்து, தனக்கு சரி என உணர்ந்த பின்னரே, ஓரு கருத்தை வெளியிடுவார் இசைஞானி.

மாற்று சிந்தனைக் கொண்டவர்கள்,  இசைஞானி முன்னுரை எழுதிய அம்பேத்கர் – மோடி ஓப்பீடுக்கு எதிர்வாதம் பேசுவதுடன், அவரைக் கடுமையான முறையில் விமர்சனம் செய்வது, தமிழக மக்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகின்றது.

இந்தியாவின் அடையாளமாக உலக அளவில் அறியப்படும் ஒருவரை, தமிழகத்தின் அடையாளமாக இந்தியாவில் அறியப் படும் ஒருவரை, தமிழகத்தைச் சேர்ந்தவர்களே விமர்சனம் செய்வது வேதனையைத் தருகிறது.

அம்பேத்கருடன் ஒப்பிடுவது தவறு என விமர்சிப்பவர்கள் பிரபல பாடலாசிரியர் ஒருவர் நிகழ்கால அரசியல் தலைவரை, அம்பேத்கருடன் ஒப்பிட்ட போது ஏன் வாய்மூடி மௌனமாக இருந்தனர்?

கருத்து சுதந்திரம் பற்றி நிறைய பேசுபவர்கள், இசை ஞானியின் கருத்து சுதந்திரத்தை மதிக்காமல் ஏளனம் செய்வது ஏன்? அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய கருத்து சுதந்திரத்தை, சிலர் மட்டுமே உரிமை கொண்டாடுவது ஏன்?

“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” – திருக்குறள்

  • . ஓம் பிரகாஷ்,Centre for South Indian Studies, Chennai

Share it if you like it