கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் ‘என் பாராளுமன்றம் என் பெருமை’ என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். சுமார் 1,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பார்லிமென்ட், உலகின் மிகப்பெரிய பார்லிமென்ட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, இப்புதிய பார்லிமென்ட் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும், தொழில்நுட்ப ரீதியாகவும் இப்பார்லிமென்ட்டில் நவீன வசதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, மசோதை தாக்கலின்போது, கணினி மயமாக்கப்பட்ட அலுவலகங்களில் இருந்து ஊழியர் எளிதில் தரவுகளையும் எடுத்துத் தரமுடியும்.
அதேசமயம், ஜனாதிபதி கையில் திறந்து வைக்காமல், பிரதமர் மோடி திறந்ததால், எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் திறப்பு விழாவை புறக்கணித்தன. அதோடு, செங்கோல் வைத்தது, ஆதீனங்களை அழைத்து தேவாரம் ஓதச்செய்தது, தீட்சிதர்களை அழைத்து வேத மந்திரங்கள் முழங்கச் செய்தது உள்ளிட்ட காரணங்களால், பார்லிமென்ட் நிகழ்வுகளை ஹிந்துத்துவாவை முன்வைத்து பா.ஜ.க. செய்ததாகவும் குற்றம்சாட்டினர். மேலும், பார்லிமென்ட் கட்டடம் சவப்பெட்டி வடிவில் இருப்பதாக ஏளனமும் செய்தனர். எனவே, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பிரதமர் மோடியை சாடினர்.
இதற்கு பதிலடியாகத்தான் பா.ஜ.க. #MyParliamentMyPride ‘என் பாராளுமன்றம், என் பெருமை’ என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தது. இதனால், இந்த ஹேஷ்டேக் கடந்த 2 நாட்களாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது.