பா.ஜ.க. மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தியது இல்லை: நாகாலாந்து தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

பா.ஜ.க. மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தியது இல்லை: நாகாலாந்து தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Share it if you like it

பா.ஜ.க. ஒருபோதும் மக்களை மதம் சார்ந்தோ, பகுதி சார்ந்தோ பிளவுபடுத்தியது இல்லை என்று நாகாலாந்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

நாகாலாந்து மாநிலம் திமாபூர் நகரில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரசார பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசும்போது, “சொந்த மக்களின் நம்பிக்கையை பெறாமல் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியாது. மக்களை மதித்து, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். நாகாலாந்தில் ஏற்கெனவே, பிரித்தாளும் அரசியல் இருந்தது. அதை நாங்கள் தற்போது தெய்வீக அரசாக மாற்றி இருக்கிறோம், பா.ஜ.க. ஒருபோதும் மக்களை மத ரீதியாகவோ, பகுதி ரீதியாகவோ பிளவுபடுத்தியது இல்லை.

நாகாலாந்து மாநிலத்துக்கான எங்களின் மந்திரம் என்பது, அமைதி, முன்னேற்றம், செழிப்பு. இதனால்தான் மக்கள் பா.ஜ.க.வின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தற்போது, நாகாலாந்து மாநிலத்திலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி வடகிழக்கின் 8 மாநிலங்களை ஏ.டி.எம்.களாக பார்த்தது. நாங்கள் அப்படிப் பார்க்கவில்லை. இந்த 8 மாநிலங்களையும் பா.ஜ.க. அஷ்ட லட்சுமிகளாக பார்க்கிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் நாகாலாந்தை ஒரு போதும் கண்டுகொள்வதில்லை. மேலும், அதன் நிலைத்தன்மைக்கும், வளத்திற்கும் முக்கியத்துவம் தரவில்லை.

காங்கிரஸ் கட்சி நாகாலந்து அரசை எப்போதும் டெல்லியிருந்து இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியை நடத்துகிறது. டெல்லி முதல் திமாபூர் வரை காங்கிரஸ் குடும்ப அரசியலை புகுத்தி இருக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் பா.ஜ.க. அரசு ஊழலில் பெரிய இடைவெளியை ஏற்டுத்தி இருக்கிறது. இதன் பயனாக டெல்லியிலிருந்து அனுப்பப்படும் பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் விழுகிறது. கோஹிமாவை ரயில்வேயுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வேயுடன் இணைத்துவிட்டால், அது வாழ்க்கையையும் தொழில்தொடங்குவதையும் எளிதாக்கும். சுற்றுலா முதல் தொழில்நுட்பம் வரை, விளையாட்டு முதல் ஸ்டார்ட் அப் வரை நாகாலாந்து இளைஞர்களுக்கு அரசு உதவி வருகிறது” என்று கூறினார்.


Share it if you like it