நாமக்கல்லில் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற விழாவுக்கு மின்வாரியத் தரப்பில் மின்சாரம் வழங்கப்படாத நிலையில், அருகிலிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேடு என்கிற இடத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில், 23.71 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த உதயநிதி, 351.12 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 1,03,321 பயனாளிகளுக்கு 303.37 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தனும், தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரும் ஏற்பாடு செய்திருந்தனர்.
சமீபகாலமாக அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும் இடமாக பொம்மைக்குட்டைமேடு பகுதியிலுள்ள இந்த இடம் மாறியிருக்கிறது. காரணம், நாமக்கல் – சேலம் பைபாஸில் இந்த இடம் அமைந்திருப்பதால், இங்கு நடத்தப்படும் விழாக்களுக்கு வருபவர்கள் எளிதாக வரமுடியும் என்பதுதான். இந்த நிகழ்ச்சியில்தான், மின்சாரம் திருட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது, நிகழ்ச்சி நடந்த இடம் காட்டுப் பகுதியாகும். அருகில் வீடுகளோ, கட்டடங்களோ கிடையாது. இதனால், ஜெனரேட்டர் வைத்துத்தான் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
ஆகவே, விழா ஏற்பாட்டாளர்கள் மேடைக்குப் பின்புறம் சுமார் அரை கி.மீ. தூரமுள்ள இடத்தில் இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் சொந்தமான மின்கம்பத்திலிருந்து கொக்கி போட்டு மின்சாரத்தை திருடி இருக்கிறார்கள். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்த பலரும், அரசு விழாவில், கலெக்டர் தலைமையில் நடந்த விழாவிலேயே, இப்படிச் சட்டத்தை மீறி மின்சாரத்தைத் திருடும் தி.மு.க.வினர், தங்களது சொந்தக் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு என்னவெல்லாம் செய்வார்கள் என்று கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.