நாமக்கல் மாவட்டத்தில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற தி.மு.க. நிர்வாகி உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அக்கட்சியினரின் அராஜகங்கள் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கேற்றார்போல், தி.மு.க.வினரின் அட்ராசிட்டிகள் தொடர்ந்து வருகின்றன. தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைமலைநகரில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சென்று, இடத்தை காலி செய்யச் சொல்லி ஊழியர்களை மிரட்டிய சம்பவம் படு வைரலானது. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா அச்சரப்பாக்கம் அருகே உள்ள வடமணிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றிய தொண்டர் அணி செயலாளர் வடிவேலு, அரிசி ஆலையில் ரகசியமாக போலி மதுபான ஆலை நடத்தி வந்தது தெரியவந்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், கள்ளநோட்டு மாற்ற முயன்றதாக நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நாமக்கல் மாவட்டத்தில் கள்ளநோட்டுகள் சர்வசாதாரணமாக புழங்கி வந்தன. இதையடுத்து, கள்ளநோட்டு மாற்றுபவர்களின் நடமாட்டத்தை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், சேந்தமங்கலம் பயணியர் மாளிகை அருகே தி.மு.க. கொடிக்கம்பம் பொருத்தப்பட்ட காரில் வந்த சிலர், நீண்ட நேரமாக அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார், அந்த வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, கட்டுக்கட்டாக 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, வாழவந்திநாடு ஊராட்சியின் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் புத்தூர்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன், கொல்லிமலை சோளக்காட்டை சேர்ந்த செல்லத்துரை, கொல்லிமலை எல்லக்கிராய்பட்டியைச் சேர்ந்த சதாசிவம் என்பது தெரியவந்தது. மேலும், 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் 2 லட்சம் ரூபாய் தருவதாக பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்த போலீஸார், 7 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.