செம்மொழி பூங்காவில் கட்டணம் வசூலித்ததை தட்டிக் கேட்ட இளைஞரை, இன்னும் 5 நிமிஷத்துல என்ன நடக்குதுன்னு பாக்குறியா என்று தி.மு.க. பெண் நிர்வாகி மிரட்டும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசு சார்பில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இதை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 28-ம் தேதி பொம்மைகுட்டை மேட்டில் நடந்த அரசு நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இப்பூங்கா அன்றையதினமே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பூங்காவில் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி என்று கூறப்பட்ட நிலையில், சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, இப்பூங்கா அமைந்திருக்கும் பகுதியில் வசிக்கும் ராசிபுரம் நகர தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் புஷ்பா என்பவர், சிறுவர்களிடம் வசூலில் ஈடுபட்டிருக்கிறார்.
மேலும், பூங்காவிற்கு செல்ல குழந்தைகளுக்கு 10 ரூபாய் கட்டணம் என்று ஒரு போர்டும் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்க தி.மு.க. நிர்வாகி புஷ்பாவிற்கும், சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் புஷ்பா, “10 ரூபாய் கூட கட்டணம் கட்ட வக்கு இல்லாமல் இங்கு ஏன் வந்தீர்கள்..?” என்று சிறுவர்களின் பெற்றோரை பார்த்து திட்டியதோடு, தி.மு.க. நகர்மன்றத் தலைவர் கவிதா சங்கர் அறிவுறுத்தலின்படியே, கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இதனிடையே, யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்று ஒரு சிறுமியின் பெற்றோர் கூறவே, என்ன மயி… பண்ணுவ, இன்னும் 5 நிமிஷத்துல என்ன நடக்குதுன்னு பாக்குறீயா? என்று சவால் விடுத்த படியே போனை எடுத்து யாருக்கோ போன் போட்டார் புஷ்பா. இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுக்கவே, அந்த நபரை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்த புஷ்பா, அவர்களுடன் வந்திருந்த குழந்தைகளை வெளியேற்றினார். இச்சம்பவத்தால் ராசிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறுகையில், “செம்மொழி பூங்காவில் கட்டணம் வசூலிக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. கட்டணம் வசூலிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில், தி.மு.க. நிர்வாகி புஷ்பா, கட்டணம் வசூலிப்பது மற்றும் பெற்றோரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்துவிட்டு தி.மு.க.காரனுங்களுக்கு ஊரை அடித்து உலையில போடுறதே பொழப்பா போச்சு என்று வசைபாடி வருகின்றனர்.