கர்நாடக மாநிலம் நந்தி மலையில் 300 அடி உயரத்தில் பாறை இடுக்கில் சிக்கி இருந்த 19 வயது மாணவரை இந்திய விமானப்படையினர் மீட்டிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூருவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இருக்கிறது புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நந்தி மலை. பிரம்மகிரி குன்று என்று அழைக்கப்படும் இந்த நந்தி மலைக்கு, மலையேற்றத்துக்காகவும், மலை மீதுள்ள சொகுசு விடுதிகளில் பொழுதை கழிப்பதற்காகவும் வார இறுதி நாட்களில் ஏராளமானோர் செல்வது வழக்கம். அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த நிஷாங்க் கவுல் என்ற 19 வயது மாணவரும், நேற்று (பிப்.20-ம் தேதி) காலை மலை ஏற்றத்துக்காக நந்தி மலைக்கு தனியாகச் சென்றிக்கிறார். இவர், பெங்களூருவில் பி.இ.எஸ். பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வருகிறார். மலையேறிக் கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி சுமார் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்திருக்கிறார் நிஷாங்க்.
இதையடுத்து, தனது செல்போன் மூலம் லோக்கல் போலீஸாரை தொடர்புகொண்டு உதவி கேட்டிருக்கிறார் நிஷாங்க். மேலும், மலையிலிருந்து தான் தவறி விழுந்த விஷயத்தை தனது குடும்பத்தினரிடமும் தெரிவித்திருக்கிறார். அதன்படி, தனது சகோதரர் நிஷாங்கை மீட்க உதவுமாறு, அவரது சகோதரி சிம்ரன் கவுல், தேசிய பேரிடர் மீட்புப் படை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் சமூக வலைத்தளப் பக்கத்தில் டேக் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, லோக்கல் போலீஸாருடன், மாநில பேரிடர் மீட்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், முயற்சி பலனளிக்கவில்லை.
எனவே, சிக்கபள்ளாப்பூர் எஸ்.பி. ஜி.கே.மிதுன்குமார், யெலஹங்காவிலுள்ள இந்திய விமானப்படை அதிகாரிகளை தொடர்புகொண்டு உதவி கேட்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, மாணவர் நிஷாங்கை மீட்பதற்காக எம்.ஐ.17 என்கிற விமானப்படை ஹெலிக்காப்டர் அனுப்பப்பட்டது. எனினும், செங்குத்தான மலையில் ஹெலிகாப்டரை தரையிறக்குவது கடினம் என்பதால், மாணவரை மீட்பது பெரும் சவாலாக இருந்தது. ஆகவே, விமானப்படை வீரர் கயிறு மூலம் இறங்கி நிஷாங்கை பத்திரமாக மீட்டார். பின்னர், மலையேறும்போது கீழே விழுந்ததில் காயமடைந்திருந்த நிஷாங்கை, மருத்துவமனையில் சேர்த்தனர். அதேசமயம், நிஷாங்க் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் அத்துமீறி நுழைந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 23 வயது இளைஞரான பாபு, கடந்த மாதம் தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குள் மலையேறச் சென்று, பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். 2 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவரையும் விமானப்படைதான் மீட்டது. இது விமானப்படையின் 2-வது சாகச சாதனையாகும்.