மோடியை அடிக்க முடியும்: காங். தலைவர் திமிர் பேச்சு..!

மோடியை அடிக்க முடியும்: காங். தலைவர் திமிர் பேச்சு..!

Share it if you like it

‘என்னால் பிரதமர் மோடியை அடித்து துன்புறுத்த முடியும், அவமானப்படுத்த முடியும்’ என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் திமிராகப் பேசியிருப்பது ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜ.க.வின் வளர்ச்சியையும், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கையும் பொறுத்துக்கொள்ள முடியாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி மீதான தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில்தான், ‘என்னால் மோடியை அடித்து துன்புறுத்த முடியும், அவமானப்படுத்த முடியும்’ என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் திமிராக பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் நானா பெடோல். இவர்தான், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, ‘என்னால் மோடியை அடித்து துன்புறுத்த முடியும். அவமானப்படுத்தவும் முடியும்’ என்று திமிராக பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அந்த வீடியோவை பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் சேஷாத் பூனாவலா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது பா.ஜ.க.வினர், இந்து அமைப்புகள் மற்றும் நாட்டு மக்களிடையே வைரலாக பரவியது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் நானா பெடோலுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியை பற்றி விஷமத்தனமாகப் பேசியிருப்பது தேர்தலில் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்கிற அச்சம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டது. உடனே, நானா பெடோலை கட்சித் தலைமை கண்டிக்கவே, ‘நான் பிரதமர் மோடியைப் பற்றிப் பேசவில்லை; உள்ளூரில் மோடி என்கிற பெயரில் ஒரு ரவுடி இருக்கிறான். அந்த லோக்கல் ரவுடி மோடியைப் பற்றித்தான் பேசினேன்’ என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறார். எனினும், ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர், தனது தகுதியை தாழ்த்திக் கொள்ளும் வகையில் ஒரு லோக்கல் ரவுடியைப் பற்றி பேசுவாரா என்கிற கேள்வி நாட்டு மக்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது. ஆகவே, வருகிற 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.


Share it if you like it