கருணாநிதி குடும்பத்தின் பெயரில் மொய் எழுதாதே!

கருணாநிதி குடும்பத்தின் பெயரில் மொய் எழுதாதே!

Share it if you like it

தி.மு.க.வுக்கு பதிலடி கொடுத்து நாம் தமிழர் கட்சியினர் வைத்திருக்கும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகியும் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. இதனால், தி.மு.க. அரசு மீது பெண்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த சூழலில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, மகளிருக்கான உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் சௌம்யா ஆரோக்கிய எட்வின், வித்தியாசமாக ஒரு போஸ்டர் அச்சடித்து நாங்குநேரி பகுதிகளில் ஒட்டியிருந்தார். அந்த போஸ்டரில், மகளிருக்கு சொத்தில் சம பங்கு. அது அப்பா கலைஞர் வீட்டு சீதனம். செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000. இது அண்ணன் தளபதியார் வீட்டு சீதனம் என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, தி.மு.க.வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினர் மற்றொரு போஸ்டர் அச்சடித்து, தி.மு.க. போஸ்டர்களின் கீழேயே ஒட்டி இருக்கின்றனர். அப்போஸ்டரில், ஏழை மக்களின் வரிப் பணத்தால் தமிழ்நாடு அரசு கொடுக்கும் பண உதவிக்கு முத்துவேலர் கருணாநிதி குடும்பத்தின் பெயரில் மொய் எழுதாதே. அனைத்து பெண்கள் என்பது வாக்குறுதி. தகுதி வாய்ந்த பெண்கள் என்பது ஏமாற்று என்று அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் நாம் தமிழர் கட்சியின் பரப்பாடி நகரம் சார்பில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இந்த பதிலடி போஸ்டர்தான் தற்போது பரபரப்பான விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

blank


Share it if you like it