பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்துவரும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இருந்து மேலநத்தம் செல்லும் சாலையில் நத்தம் கிராமத்தில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தாளாளராக இருப்பவர், அசரத் பிலால் தெருவைச் சேர்ந்த குதுப்தீன் நிஜாம். இவரது மனைவி முகைதீன் பாத்திமா, பள்ளியின் நிர்வாகியாக இருக்கிறார். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக தச்சநல்லூர் கோகுல் நகரைச் சேர்ந்த காதர் அம்மாள் பீவி பணிபுரிந்து வருகிறார். இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவிகள் உட்பட சிலரை, தாளாளரான குதுப்தீன் நிஜாம் தனது அறைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு அளித்திருக்கிறார். மேலும், இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் பரீட்சையில் ஃபெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி இருக்கிறார். இதனால், மாணவிகள் பலரும் பயந்துகொண்டு தங்களது பெற்றோர் உட்பட யாரிடமும் சொல்லவில்லை. இந்த சூழலில், கடந்த 4-ம் தேதி பள்ளிக்கு வந்த பிளஸ் 2 மாணவிகள் 3 பேரை, தாளாளர் குதுப்தீன் தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், சகமாணவிகளிடம் கூறி அழுதிருக்கிறார்கள்.
இதையடுத்து, பள்ளித் தாளாளரை கண்டித்து நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பெற்றோர்கள் மற்றும் சில தனியார் அமைப்பினரும் தாளாளர் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த போலீஸாரும், வருவாய் துறையினரும் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர், இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில், பள்ளியின் தாளாளர் குதுப்தீன் நஜீம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். அதேபோல, தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா, தலைமை ஆசிரியர் காதர் அம்மாள் பீவி ஆகியோர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில்தான், தாளாளர் குதுப்தீன் நஜீம் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. குதுப்தீன் போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது குண்டர் சட்டத்திலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.