நியூஸ் கிளிக் விவகாரம் – அதீத ஜனநாயகம் தேசத்திற்கு ஆபத்து

நியூஸ் கிளிக் விவகாரம் – அதீத ஜனநாயகம் தேசத்திற்கு ஆபத்து

Share it if you like it

புது தில்லியை தலைமையகமாக கொண்டு இயங்கி வந்த நியூஸ் கிளிக் இணையதள செய்தி ஊடகம் அதன் செயல்பாடுகள் பற்றி சந்தேகம் எழுந்த நிலையில் நேற்று புது தில்லி காவல்துறை அங்கு சோதனை மேற்கொண்டனர்.. இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைகள் அங்குள்ள ஊழியர்களின் ஆவணங்கள் சோதிக்கப்பட்டதில் சீனாவில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு ஊடகப் போர்வையில் உள்நாட்டில் சீன ஆதரவு கருத்துக்களையும் உள்நாட்டு தேசவிரோத கருத்துக்களையும் கருத்துருவாக்கம் செய்ய பணம் பெற்றது அம்பலமாகி இருக்கிறது. இதன் அடிப்படையில் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது .அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டு மேல் அதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக செய்திகள் வெளியாகிறது.

பிறந்து வளர்ந்து வாழும் நாட்டில் அதன் ஒவ்வொரு அசைவையும் ஆட்சியாளர்களின் ஒவ்வொரு நகர்வையும் வன்மத்தோடு கருத்துக்கள் பதிவது. சொந்த நாடு வளர்ச்சி வெற்றி சாதிக்கும் போது இது தேவைதானா? என்று அலட்சியமாக கேள்வி எழுப்புவது. பகைநாட்டிடம் அச்சுறுத்தல் அல்லது இழப்புகளை எதிர்கொள்ளும்போது இதுதான் உள்நாட்டை பாதுகாக்கும் லட்சணமா? நிர்வாகம் செய்ய திறமை இல்லை என்றால் பதவி எதற்கு விட்டு விலகிப் போகலாமே என்று அவமதிப்பாக பொறுப்பற்ற கருத்துக்களை பகிர்வது என்று திரும்பிய பக்கமெல்லாம் தேச விரோதம் தலைவிரித்தாடுகிறது. கட்சி அரசியல் ஆதரவு எதிர்ப்பு என்ற போர்வையில் தேசிய எதிர்ப்பு தேசிய இறையாண்மையை அவமதிக்கும் கருத்துக்கள் சர்வசாதாரணமாக உலா வருகிறது. இவற்றின் பின்னணியில் இங்குள்ள பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகள் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் கைவரிசை இருக்கக்கூடும். அவர்களின் பொருளாதார பின்புறமும் சட்ட உதவிகளும் இவர்களை எல்லாம் வெளிப்படையாக கருத்து பரிமாற துணை நிற்கும் என்ற அளவில் தான் கணிப்புக்கள் இருந்து வந்தது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தலிலேயே சீனாவின் கைவரிசை இருந்ததும் அதன் காரணமாக அமெரிக்க அரசியலிலே சில சலசலப்புகள் எழுந்ததும் தான் அமெரிக்காவில் உள்நுழைந்து விளையாடும் சீனாவால் இந்திய அரசியலில் உள் நுழைந்து விளையாட எவ்வளவு நேரம் ஆகும்? என்ற எச்சரிக்கையை எழுப்பியது . மேலும் பாரதத்தின் கடந்த கால ஆட்சியாளர்களின் சீன ஆதரவு மனநிலை ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போய் தேசத்தின் மீது அவதூறு பிரச்சாரம் செய்யும் சமகால தேசவிரோத அரசியல் . அவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் செய்யும் கருத்து உருவாக்கம் எல்லாமே தேசத்திற்கும் தேசிய இறையாண்மைக்கும் எதிராகவே இருக்கும் ஒற்றுமை என்று அனைத்தையும் ஒரு கோட்டில் வைத்து சீர்தூக்கி பார்க்கும் போது இவை எல்லாவற்றின் பின்னணியில் உள்நாட்டு துரோகம் கடந்து ஏதோ ஒரு அந்நிய சதி நிச்சயம் இருக்கக்கூடும் என்ற அச்சம் பல்வேறு தரப்பிலும் மேலோங்கிய சந்தேகம் இன்று நியூஸ் கிளிக் ஊடகத்தின் தேச விரோதம் மூலம் ஊர்ஜிதமாகிறது.

புல்வாமா தாக்குதல் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல்களில் இந்திய தரப்பின் இழப்புக்களையும் துயரங்களையும் பாகிஸ்தான் சீன ஆதரவு என்ற பெயரில் வெற்றி கொண்டாட்டமாக கொண்டாடிய போது நிச்சயம் இதன் பின்னணியில் தேச துரோகம் மறைந்திருக்கிறது என்பது நிரூபணம் ஆனது. ஆனால் அடுத்தடுத்த காலகட்டங்களில் தொடர்ச்சியான தேசத்தின் வெற்றிகள் சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை ராஜ்ய ரீதியாக கையாண்டு யுத்தம் இன்றி அவர்களை எல்லாம் வென்றெடுத்த பாரதத்தின் ராஜ்ஜியம் உளவுப் பணி ஒருங்கிணைப்பு காரணமாக பெரும் வன்மமான கருத்துக்கள் வெளிப்பட தொடங்கியது. அவையெல்லாம் எப்பாடு பட்டேனும் சொந்த தேசத்தை வீழ்த்த வேண்டும். உலக அளவில் அவமதிக்க வேண்டும் .அதன் மூலம் தங்களின் அந்நிய ஆதரவு பாசத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற கருத்தே மேலோங்கி இருந்தது ‌ இவற்றின் பின்னணியில் மதப் பற்றுதல் அந்நிய சித்தாந்த ஆதரவு என்று மேம்போக்கான விவகாரங்கள் இருந்தாலும் பின்னணியில் அந்நிய சதிகளும் இருக்கக்கூடும். அந்நிய உளவுத்துறைகளின் ஆதரவும் பொருளாதார பின்புலமும் இருக்கக் கூடும் என்ற கருத்து பல மட்டத்திலும் எதிரொலித்தது. அது தற்போது ஊடகப் போர்வையில் ஒளிந்திருக்கும் தேசவிரோதிகளை கையும் களவுமாக பிடிப்பதிலிருந்து ஊர்ஜிதம் ஆகிறது.

தேசத்தின் பாதுகாப்பு தேசிய இறையாண்மை என்று வரும்போது அதில் சமரசம் இல்லாத ஆட்சியாளர்கள் இருக்கும் ஆட்சி காலத்தில் தேசத்தின் தலைநகரிலேயே இவ்வளவு வெளிப்படையாக தேசவிரோத கருத்தியலை உருவாக்குபவர்கள் அதற்காக வெளிநாட்டிலிருந்து அதுவும் பகைநாட்டில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இது போன்ற கருத்துகளை செய்பவர்கள். கடந்த காலங்களில் இந்த தேசத்திற்கு எதிராகவும் அந்நிய தேச ஆதரவாகவும் எவ்வளவு அட்டூழியங்களை உள்நாட்டில் அரங்கேற்றி இருப்பார்கள்? ஊடகம் போர்வையில் ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்ற பாதுகாப்பு வளையத்தில் இவர்கள் கடந்த காலங்களில் செய்த அத்தனை விஷயங்களையும் முழுமையான ஆய்வுக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்பட வேண்டும். அது மட்டுமே இவர்களின் முழு பின்னணியை வெளிக்கொணரும். இவர்களின் ஆதரவாளர்கள் தொடர்பாளர்கள் பற்றிய முழு வலை பின்னலையும் கண்டறிய முடியும்.

இந்தியா – பாகிஸ்தான் என்று வருமானால் பாகிஸ்தான் ஆதரவு கருத்துக்கள் இந்தியா சீனா என்று வருமானால் சீன ஆதரவு கருத்துக்கள். இந்தியா இலங்கை விவகாரத்தில் கூட இலங்கையின் உள்நாட்டு விவகாரம் அது தொடர்பான விஷயங்களில் பாரதத்தை குற்றவாளி போல சித்தரித்து சர்வதேச அளவில் பாரதத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையிலான கருத்தியல்கள் ஏராளமாக வலம் வந்தது. குறிப்பாக இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் அதன் பின்னணியில் இருந்த பாரதத்தின் ஆட்சியாளர்கள் அவர்கள் செய்த குற்றங்கள் அவர்களின் கட்சி அரசியல் சார்ந்த குற்றங்கள் என்பதை கடந்து பாரத தேசத்தின் போர் குற்றமாகவே கருத்தியல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சர்வதேச அளவில் போர் குற்ற விசாரணையில் இலங்கையோடு இந்தியாவும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் இந்தியாவின் உள்ளிருந்தே அதிக அளவில் வெளிப்பட்டது. இதன் பின்னணியில் மனிதாபிமானம் தொப்புள் கொடி உறவுகள் சகோதர நாடு என்ற மேலோட்டமான ஒப்பனைகளைக் கடந்து அப்பட்டமான தேச விரோதமும் அந்நிய நாட்டு அடி வருடும் உள்நாட்டு துரோகமுமே நிறைந்திருந்தது.

அதிகப்படியான கருத்துச் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பதை இனியேனும் மத்திய அரசு உணரட்டும். தேசவிரோதிகள் உள்நாட்டு துரோகிகளின் மீது எவ்வளவு தான் மென்மையான போக்கை கடைபிடித்தாலும் இங்கு எதுவும் மாறாது. அவர்களின் தேச விரோத சிந்தனையோ அந்நிய ஆதரவு மனோபாவம் என்றைக்கும் மாறாது. ஆனால் அதன் மூலம் தேசம் சந்திக்கும் அபாயங்களும் இழப்புக்களும் அதிகமாகவே இருக்கும். தேசத்தின் நலன் பாதுகாப்பு என்று வரும்போது சமரசம் இல்லாத கண்டிப்பு மட்டுமே இங்கு முழுமையான பலன் தரும். இதை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை கண்காணிப்புகளை நாடு முழுவதும் தீவிர படுத்தினால் இன்று புது தில்லியில் அகப்பட்டது போல நாடு முழுவதிலும் இருக்கும் அந்நிய சித்தாந்த ஆதரவாளர்கள் அந்நிய தேச ஆதரவாளர்கள் ஆவணப்பூர்வமாக பிடிப்படுவார்கள். அவர்களையும் அவர்களின் தொடர்பு களையும் முழுமையாக கண்டறிந்து அவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோல தேசவிரோத சிந்தனைகளும் தேசவிரோத கட்டமைப்புகளும் மீண்டும் தலை தூக்காமல் கட்டுப்படுத்த முடியும். அதன் மூலமே உள்நாட்டு பாதுகாப்பு எல்லை புற பாதுகாப்பு அனைத்தையும் இழப்பு இடர்பாடுகள் இல்லாமல் சுமூகமாக கையாள முடியும்.


Share it if you like it