ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மதுரையைச் சேர்ந்த வக்கீல்கள் முகமது அப்பாஸ், முகமது யூசுப் உட்பட 5 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பினர், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நாட்டுக்கு எதிராக சதி செய்வதாகவும், நிதியுதவி செய்வதாகவும், இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவது உட்பட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியது. இதையடுத்து, நாடு முழுவதும் மாஸ் ரெய்டு நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், பி.எஃப்.ஐ. நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்தது.
இதைத் தொடர்ந்து, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. எனினும், அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் நடந்த சோதனையில் தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களது கூட்டாளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முகமது அப்பாஸ், முகமது யூசுப் உட்பட 5 பேரை கைது செய்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடு அமைப்பதே நோக்கம் என்பதும், இதற்கு தடையாக இருக்கும் ஹிந்து தலைவர்களை கொலை செய்யவதோடு, ஹிந்து கோயில்களை தகர்க்க வேண்டும் என்பதும் தெரியவந்தது.
மேலும், இதற்காக மாவட்ட வாரியாக ஆட்களை நியமித்து, முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். அதோடு, இவர்களை 5 பேர் கொண்ட குழுவாக பிரித்து, அவர்களில் ஒருவர் வழி நடத்தும் பொறுப்பை ஏற்பார் என்றும், அவரது சொல்லுக்கு மற்ற நபர்கள் கட்டுப்பட வேண்டும் என்றும், இவர்களுக்கு சதித் திட்டம் தீட்டிக்கொடுக்க மண்டல அளவில் பொறுப்பாளர்கள் இருப்பதாகவும், முஸ்லிம் இளைஞர்களுக்கு தற்காப்பு, ஆயுத பயிற்சி அளிப்பதே இவர்களின் வேலை என்றும் தெரிவித்திருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.