லஞ்சம் வாங்கிய தி.மு.க. கவுன்சிலர்: லீக்கான வீடியோ!

லஞ்சம் வாங்கிய தி.மு.க. கவுன்சிலர்: லீக்கான வீடியோ!

Share it if you like it

தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், வாங்கச் சொன்னது தலைவர்தான் என்று அக்கவுன்சிலர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க. 11 வார்டுகளிலும், சுயேச்சை 4 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க., முஸ்லிம் லீக், மா.கம்யூ. ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டுகளை கைப்பற்றின. இதையடுத்து நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 17-வது வார்டு கவுன்சிலர் வெண்ணிலா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் சிவராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், தி.மு.க. வேட்பாளர் வெண்ணிலாவை எதிர்த்து, அதே கட்சியைச் சேர்ந்த 12-வது வார்டு கவுன்சிலர் பரிமளா வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தேர்தலில் 11 வாக்குகள் வாங்கி பரிமளா வெற்றிபெற்று தலைவரானார்.

இந்த நிலையில்தான், லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் பரிமளா சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறார். அதாவது, கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு கட்டுவதற்கு தடையில்லாச் சான்றிதழ் மற்றும் அனுமதி சான்றிதழ் வழங்குவதற்கு நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் இருந்து வந்தது. இந்த சூழலில், நகராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் தி.மு.க.வைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவர், நகரப்புறப் பகுதியில் வீடு கட்டுவதற்கு தடையில்லாச் சான்றிதழ் கேட்டு வந்த ஒருவரிடம் 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சத்தியசீலன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வந்தது.

இப்படிப்பட்ட நிலையில், கூடலூர் நகர்மன்றக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கவுன்சிலர் சத்தியசீலன் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ குறித்து அவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சத்தியசீலன், நான் லஞ்சம் வாங்கியது உண்மைதான். ஆனால், நான் எனக்காக வாங்கவில்லை. நகர்மன்றத் தலைவர் பரிமளாதான் வாங்கச் சொன்னார். நான் ஒரு ஆளை அனுப்புகிறேன். அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு தடையில்லாச் சான்று வழங்க ஆவன செய்யும்படி கூறினார். இதை நீங்களே செய்ய வேண்டியதுதானே என்று நான் கூறினேன். அதற்கு அவர், அந்த இடம் உங்களது வார்டுக்கு உட்பட்டது. ஆகவே, நாளைக்கு நீங்க பிரச்னை செய்யக் கூடாது என்பதற்காகத்தான் உங்களிடம் அனுப்புகிறேன் என்று கூறினார். ஆகவே, நானும் பணத்தை வாங்கி நகர்மன்றத் தலைவர் பரிமளாவிடம் கொடுத்து விட்டேன். இதற்கு கமிஷனாக எனக்கு 5,000 ரூபாய் கொடுத்தார் என்று உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

கவுன்சிலர் சத்தியசீலன் இவ்வாறு கூறியதால், அவையில் பெரும் சலசலப்பு நிலவியது. உடனே. எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் எழுந்து, தி.மு.க. தலைவர் மீது அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரே குற்றம்சாட்டி இருக்கிறார். ஆகவே, இது தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தனர். அதேசமயம், தி.மு.க. கவுன்சிலர் பலரும் எழுந்து சேர்மனுக்கு ஆதரவாக பேசினர். இதனால், அவையில் கூட்டலும் குழப்பமும் ஏற்பட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த நகராட்சி சேர்மன் லஞ்சம் வாங்கச் சொன்ன இந்த விவகாரம்தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it