நாங்க அணுகுண்டு வச்சிருக்கோம்: பாக். அமைச்சர் பகிரங்க மிரட்டல்!

நாங்க அணுகுண்டு வச்சிருக்கோம்: பாக். அமைச்சர் பகிரங்க மிரட்டல்!

Share it if you like it

பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது என்று அந்நாட்டு அமைச்சர் ஷாஜியா மாரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகழிடம் என்பது உலக நாடுகள் அனைத்தும் அறிந்த விஷயம்தான். ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா, உல் உம்மா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதும் அனைவரும் அறிந்ததுதான். குறிப்பாக, இந்தியாவில் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாகவே, பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானின் நட்பு நாடாக அறியப்படும் அமெரிக்கா கூட, அந்நாட்டை பயங்கரவாதத்தின் பிறப்பிடம் என்று வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்காவிலுள்ள ஐ.நா. சபையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ‘காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறினார். இதற்கு அதே அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுதவர்கள், அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள், நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம்’ என்றார் காட்டமாக. இந்த விவகாரம் கூட்டத்தொடர் முடிந்த பிறகும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய பிலாவல் பூட்டோ, ‘ஒசாமா பின்லேடன் இறந்து விட்டார். ஆனால், குஜராத் கசாப்புக் கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) இருக்கிறார். பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் ஹிட்லரின் நாசிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள்’ என்றார். பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, ‘விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாட்டைச் சேர்ந்த அவரின் பேச்சு, பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு’ என்று பதிலடி கொடுத்தது.

மேலும், பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் எதிர்ப்புக் கிளம்பியது. பா.ஜ.க.வினர் பாகிஸ்தான் கொடியை எதிர்த்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதேபோல, நாட்டின் பல்வேறு மாநில தலைநகரங்களிலும் பிலாவல் பூட்டோவை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டும் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த சூழலில்தான், எங்களிடம் அணுகுண்டு இருக்கிறது என்று பகிரங்கமாக இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார் அந்நாட்டின் பெண் அமைச்சர் ஷாஜியா மாரி.

பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த பெண் தலைவரும், அமைச்சருமான ஷாஜியா மாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்களது அணுசக்தி நிலை அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எப்படி பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும். எங்களை அறைந்தால் நாடு பின்வாங்காது. இந்தியாவின் பிரதமர் நாட்டில் வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மோடி அரசாங்கம் சண்டையிட்டால் பிறகு அவருக்கு தக்க பதிலடி கிடைக்கும். பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறினால் பாகிஸ்தான் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்காது” என தெரிவித்திருக்கிறார். இதுதான் இந்திய மக்களிடையே மட்டுமின்றி, உலக நாடுகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்பதை இவரது அணுகுண்டு மிரட்டல் மெய்ப்பிக்கிறது.


Share it if you like it